தேவதைகள்

கடவுள்களுக்கு தேவைப்படுவது போல
நல்ல நேரம்,
நல்ல நாள்,
நல்ல காலமெல்லாம்
தேவதைகளுக்கு எப்போதும்
தேவைப்படுவதில்லை.

தேவதைகள் வந்து செல்லும் அச்சிறு கணத்திலும் நம் வாழ்வில் எதிர்பார்த்திராத, காத்திருக்காத அந்த அற்புதத்தை நிகழ்த்திவிடுகிறார்கள்.

அன்பைத் தவிர தேவதைகளுக்கு ஆண்பால், பெண்பால் என அடையாளம் இருப்பதில்லை. அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கிறார்கள்.

கட்டுப்பாடுள்ள கடவுள்களின் மீது நம்பிக்கை இல்லையே தவிர, யாராக வேண்டுமானாலும் இருக்கும் எளிமையான தேவதைகளின் மீது பெரும் நம்பிக்கை உண்டெனக்கு.

நிழல் மட்டும் நிச்சயம்

நிழல்கள் எப்போதும்
பிறப்பதும் இல்லை,
இறப்பதும் இல்லை.

இருளும் வரை இருக்கிறது அவ்வளவே!

உலகின்
முதல் மனிதனுக்கு முன்பும்,
கடைசி மனிதனுக்குப் பின்பும்
நிழல் மட்டும்
நிரந்தரமாக இருக்கிறது இப்பூமியில்…

காத்திருப்போம் நாளைக்காகவும்,
நாளை வரப்போகும் நிழலுக்காகவும்…

யாரின் நிழல்கள் நாம்?

நாம் புரிந்துகொள்ளாத
ஒவ்வொருவரின் அன்பெல்லாம்
நம்மைச் சுற்றிய நிழலாகிறது.

அந்த நிழலும் சரி,
அவர்களின் அன்பும் சரி
நம்மிடம்
தொடர்பு கொள்வதில்லை,
தொந்தரவு செய்வதில்லை,
எதிர்பார்ப்பதும் ஏதுமில்லை,
எதிரில் இருப்பதும் இல்லை,
அது அதுவாகவே இருந்து
நம்மை நாமாகவே இருக்கச் செய்கிறது.

நிஜங்களை விட
நிழல்கள் எப்போதும்
நமக்குத் துணை நிற்கிறது.

நிஜங்கள் இல்லாத வாழ்கையை விட,
நிழல்கள் இல்லாத வாழ்க்கை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது.

இவ்வாழ்வில் யாரின் நிழல்கள் நாம்?

இரகு

08.58 PM

கடல் என் மோட்சம், கரை என் வாழ்வு

கடல் என்னை மூச்சுமுட்டாத படி மூழ்கடிக்கும்,

கடல் என்னைக் கண்டுபிடிக்கும் தூரத்தில் தொலைத்து வைக்கும்,

கடல் என்னை நொறுக்காமல் மோதி உடைய வைக்கும்,

கடல் என்னைக் காரணம் இல்லாமல் அழ வைக்கும்,

சக மனிதன் செய்யும் அத்தனையையும் மாற்றிச் செய்யும் கடல், கடைசி வரை நான் தூக்கிப் பார்க்கும் கைக்குழந்தை.

அதன்முன் பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, ஆடி, களைத்து, கரைந்து போகிறேன் நான்.

கடல் என் மோட்சம், கரை என் வாழ்வு. இடையில் நான், நீச்சல் தெரியாத மீன்.

இரவு

#photography #tamil #poem

பகல்,
இவ்வுலகின் மிக நீண்ட பாலைவனம்.

பாவப்பட்ட இவ்உலகை,
இரவுகள்
புனிதப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

யாருமற்ற, ஏதுமற்ற மனிதர்களுக்கு இரவுகள் தாய்மடி.

வானம் முழுவதும் மழை

என் வீட்டுக் குப்பை மேட்டில் வளர்ந்த,
யார் கால் பட்டாலும் கசங்கிவிடும்
சின்னஞ்சிறு செடி தான் அது.

அளவில் அது ஒன்றும் ஆள் உயரமும் இல்லை,
அவ்வளவு பெரிய ஆலமரமும் இல்லை.

ஆனாலும் என்ன….

முழு வானம் கரைந்து மழையாகிப் போனாலும், தன் முதுகில் தாங்கி இறக்கிவிடத் தயாராகத் தான் நிற்கிறது அந்தச் செடி.

மழை தான் வருவதாயில்லை.
இருக்காதா பின்ன, உயரத்திலிருந்த விழ யாருக்குத்தான் விருப்பம்?

– ரகு
21-06-2020

#தமிழ் #கவிதை #மழை #tamil #poems

எங்கள் ஊர் கிணறு

பகலில் நீருக்காகவும்,
இரவில் நிலாவிற்காகவும்
காத்திருக்கிறது எங்கள் ஊரின் மொட்டைக் கிணறு.

காத்திருப்பின் துக்கம் கிணற்றின் தொண்டையைக் கவ்வுகிறது.
கிணற்றுக்கு ஒரு மிடறு தண்ணீர் தர யாருமில்லை, தண்ணீருமில்லை.

எல்லை வரை வாழ்க்கை

இதுவரை நடந்த
அத்தனைக்குப் பிறகும்
இன்னமும் ஏதோ ஒன்று
மீதம் இருக்கத்தான் செய்கிறது, இவ்வாழ்வை இனியும் வாழ்ந்திட…

வாழ்ந்து முடிந்த முழு வாழ்வென்பது யாரும் வாழ்ந்திடாத ஒன்று…

கூட்ஸ் பெட்டி

கடைசியாக யாருமற்ற கூட்ஸ் பெட்டியில்
நெடுந்தூரம் பயணத்திருக்கிறான் தற்கொலை செய்தவன்.

மயான அமைதியை விட வேறேன்ன அவனைப் பயப்படுத்தியிருக்க முடியும்?

#தமிழ் #கவிதை #தற்கொலை

ஒரு மனிதன், ஒரு இரவு, ஒரு உலகம்

இன்னும் எத்தனை பொய்களைத் தான் சொல்வது,
அத்தனையும் I’m fine என்றே முடிகிறது…


மனிதர்களே வேண்டாமென வெறுத்துச் செல்கிறேன்.
என் எதிரில் வருபவனும் அதையே நினைத்தவனாக இருக்கலாமல்லவா?


இந்த இரவுதான் எத்தனை பேரின் தூக்கத்தை கெடுக்கப்போகிறதோ…


இன்றிரவேனும் அழும் கண்ணீர் கொண்டு இப்பெரு நிலவை கரைத்து விட வேண்டும்…


ஆழ்ந்து அழ காரணம் நிறைய இருக்கிறது,
இவ்விரவும், கண்ணீரும் மட்டும் கொஞ்சமாய் இருக்கிறது…


ஆகப்பெரும் ஆசை எல்லாம் வலி தீர அழ வேண்டும் என்பதே…


நான் வாங்கிய குடை மழைக்குப் பழகியதாகத் தெரியவில்லை,
என்னோடு துணைக்கு அதுவும் நனைந்தபடி வருகிறது…


வெயில் நிலத்தில் பெய்யும் மழை போல, என்றேனும் அழுது விடுங்கள்.
மீண்டும் அந்த வறண்ட நிலத்திலிருந்து ஒரு பூ பிழைக்கட்டுமே சிறு துளி நீரிலிருந்து…


இதுவரை வந்த அத்தனைக்குப் பிறகும் இன்னும் எதோ ஒன்று மீதமிருக்கத்தான் செய்கிறது, இந்நெடு வாழ்வில்…


வீடு சேர்ந்த எல்லோரின் நிழல் இரவாக விழுகிறது இப்பூமியில்…


யாரின் கண்ணீரோ இன்னும் பெய்துகொண்டே இருக்கிறது இரவாக, மழையாக…


கடல் விட்டு திரும்பும் வரையில்,
கடல் சேர்ந்த நதி நான் இங்கு…


அறிமுகமில்லாத அத்தனை பிரச்சனைகளையும் சமாளித்துக்கொள்கிறேன்.
முகம் அறிந்த யாரேனும் எப்படி இருக்கிறாய் எனக் கேட்டுவிட்டுச் செல்லுங்கள்.
இப்போது நான் நலமாக இல்லை…


எப்படியேனும் இவ்விரவைக் கடந்தால் பிழைத்து விடுவேன், நிலவும் இருளும் இந்த இரவின் துடுப்பை எதிரெதிர் திசையில் செலுத்துகின்றது…


அன்பெனப்படுவது, யாரும் பார்க்காத விடியலில் பூக்கும் பூ…

Start a Blog at WordPress.com.

Up ↑