நாளை என்றொரு நாள்

தட்டியும் திறக்காத கதவுகள்,
பதில் தேடிக் காத்திருக்கும் கேள்விகள்,
சொல்லி முடிக்காத விருப்பவெறுப்புகள்,
பேசிட அழைக்காத தொடர்புகள்,
அழைத்தும் பேசிடாத தொடர்புகள்,
நிலவை விலகி நிற்கும் இரவுகள்,

இவையெல்லாம்
நாளை என்ற நாளுக்காக
மீதியிருக்கும் காத்திருப்பை மிச்சம் வைத்திருக்கிறது…

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி

அந்த இரவில்
அந்தத் தெருவில்
அந்த நாய்
குரைத்துக் கொண்டே இருந்தது…

நான் தூங்கிய பின்பும்
அந்த நாய்
குரைத்துக்கொண்டே தானிருந்திருக்கும் எந்த வித்தியாசமும் இன்றி…!

சிறு விடை தேடிய பெரு வினா

எல்லோரும்
ஏதாவதொன்றாக
ஆகப்போவது எப்படியும் நிகழ்ந்தேறிவிடப்போகிறதென்றாலும்,

யாராரெல்லாம் எதுயெதுவாக
நிகழ்த்தப்போகிறோமென்பதன் பதிலுக்காக
ஆயிரமாயிரம் கால்களில் நின்று ஆகப்பெரியதாகக் காத்திருக்கிறது

சிறு விடை தேடிய பெரு வினா…

இந்தியக் கனவு

உனக்கும் எனக்கும் இடைவெளியில்

இரண்டாயிரம் தொலை மைல்கள்,

இரண்டு பகல், ஒரு இரவு கொலை பயணங்கள்,

ஐந்து கொடும் எல்லைகள்,

ஐம்பது கோடி நெருக்கடி மனிதர்கள்…

கணக்கிட முடிந்தவைகளாக இவைகளெல்லாம், உனக்கும் எனக்குமான இடைவெளியில்…

நாம் எனப்படுவது?

உன்னையும், என்னையும், யாரையும் பற்றி
நானென்ன புதியதாய்ச் சொல்லிட ?!

நாம்,
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.

இருளில் மூழ்கிய இரவுகள்

இந்த இரவில் இன்னும் மிச்சமிருப்பது
நானும், விடியலும் மட்டுமே.

இவ்வுலகம் வழக்கம்போல
காலையில் கண் விழித்து
என்னோடு வீதி வந்து சேர்ந்துவிடும்.

இவ்வுலகம் நேற்று விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து கொள்ளும் தினந்தோறும்.

மீண்டும் மீண்டு மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்.

இப்போது இந்த உலகில் மிச்சமிருப்பது
நானும், இவ்இரவும் மட்டுமே.

வானிலை அறிக்கை – Weather Report

வாழ் நிலை அறிக்கையில்
புயல் எச்சரிக்கை.

மௌனப் புயலில் மெள்ளச் சாகும் மனிதர்கள்.

நிலா வரும் வழியில் வர இருக்கிறது இவ்இரவுப் புயல்.

மீதமிருக்கும் இப்பொழுதுக்குப் பின்
தாக்க வருகிறது இரவுகள் எனும்
பெரும் புயல்கள்.

இழப்பீடுகள் இல்லா இப்புயலுக்கு இரவுகள் என்று பெயர்.

டைரியின் பக்கங்கள்

யாரோ ஒருவரின் டைரியில்
எழுதப்பட்ட,
எழுதாமல் விடப்பட்ட,
கிறுக்கப்பட்ட,
கிழித்தெரியப்பட்ட
ஒற்றைப் பக்கம் தானே நீயும், நானும்.

மழை வானம்

மழைக்குப் பிறகான வானத்தைப் போல,
விடாமல் தூறிக்கொள்கிறது மனம்.

துளித்துளியாக கரைந்த மேகம், துளியளவும் குறையவில்லை.

வெறுமையின் நிறம் கருப்பு

அன்பிற்கோ,
அரவணைப்பிற்கோ,
துணைக்கோ,
தூக்கத்திற்கோ
என்றிந்த வறுமைக் கோட்டின்கீழ்
நிற்க இடமில்லாமல்
நசுங்கிக் கொண்டு வாழ வைத்து,

இரவுகள் மனிதனை எளிதில் ஏழையாக்கிவிடுகிறது…!

இரவின் கருப்பு போதியதாக இல்லை, மனித
இருப்பின் வெறுமையை காட்டிட…