மண்ணைச் சுடும் மழை

பாலைவனத்தில் பெய்யும்
இரவும், மழையும்
மண்ணைச் சுடும் என்பதில்
ஆச்சரியம் ஏதுமில்லை.

அம்மண் வெயில் மட்டும்
எதிர்பார்த்துப் பழகியது.

எதிர்பாராது வரும்
பெருமழையும், பேரன்பும்
பாலைவன மண்ணையும்,
பாலைவன மனிதர்களையும்
தன்நிலை தடுமாறத்தான் செய்யும்.

– ரகு

இந்தியக் கனவு

உனக்கும் எனக்கும் இடைவெளியில்

இரண்டாயிரம் தொலை மைல்கள்,

இரண்டு பகல், ஒரு இரவு கொலை பயணங்கள்,

ஐந்து கொடும் எல்லைகள்,

ஐம்பது கோடி நெருக்கடி மனிதர்கள்…

கணக்கிட முடிந்தவைகளாக இவைகளெல்லாம், உனக்கும் எனக்குமான இடைவெளியில்…

நாம் எனப்படுவது?

உன்னையும், என்னையும், யாரையும் பற்றி
நானென்ன புதியதாய்ச் சொல்லிட ?!

நாம்,
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.

Shift+Delete

ஒரு உறவை,
ஒரு அறிமுகத்தை,
ஒரு நினைவுகளை,
ஒரு உரையாடலை,
ஒரு தொடர்பு எண்ணை
மொபைல் போனிலிருந்து டெலிட் செய்யப்படுவது போல
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை

மனதிலிருந்து ஒவ்வொன்றாக டெலிட் செய்ய முயற்சிக்கையில்…

கிழவிகள் கிராமத்தின் சொத்து

அத்துவானக் காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள் அந்தக் கிழவி,

அவளிடம் சென்று சேர்கையில் கடும் வெயில் என் கபாலம் தாண்டியிருந்தது.

என் புதுச் செருப்புகளைத் தாண்டி
வன்முறை வணக்கம் சொல்லியது வேலாமரத்து முள்.

நடந்து பழகிய தடமே இல்லாத அந்தக்காட்டில் கரடுமுரடுகளைக் கடந்து அந்தக் கிழவியைச் சேர்கையில், கல்லும் முள்ளும் மூன்று முறை என் காலின் இரத்தச் சுவை பார்த்திருந்தது.
முள் குத்தியதில் நொண்டி நடந்த என் காலைக் குனிந்து பார்த்து வல்லினமான வார்த்தைகளில் கிழவி சக்திக்கு மீறி பேசுகிறாள்.

இப்புடி மொட்ட வெயிலுல நீ பாக்கவராட்டி நா என்ன செத்தா போயிடப் போரேன் என ஆரம்பித்த அவளின் வசவுகள் உன்னையெல்லாம் பாக்கத் தான்டா இந்த ஒத்த உசுரக் கய்யில புடிச்சுட்டு ஆடுமாடுகளோட ஒன்னா அலையுறேன், பத்து போயிட்டு வா சாமி எனக் கூறி எங்களுக்கு வெயில் குடை பிடித்த சூரியனைப் போல உக்கிரமான பேரன்பைப் பெய்திருந்தாள்.

முழுவதும் வெயலில் நனைந்தபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன், வரும் வழியில் என் கால்கள் அங்கிருந்த கற்களுக்கும், முட்களுக்கும் பழகியருந்தன.

மனதின் நிர்வாணங்கள்

அந்த இரவோடு மறந்திடப் போகும் முகங்களைச் சந்திப்பது போல்
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை நம்முன் நிர்வாணமான மனது கொண்டவர்களைச் சந்திப்பது.

அவர்களைச் சுற்றியிருந்த பொய்களைக் கலைத்து எறிந்துவிட்டுப் பார்க்கையில்,
அவர்களின் எடை கூடிச் செல்கிறது.

மனதின் நிர்வாணங்களைச் சந்திக்கையில் அவர்கள் நம்மையும் உண்மையாக இருக்கச் சொல்லாமல் சொல்கிறார்கள்.
அவர்களின் இரகசியம் கொண்டு நம்மனதின் இரகசியங்களை உடைக்கிறார்கள்.
ஆனால் சந்திப்பின் இறுதியில் இவர்கள் நம்மை மயிலிரகைப் போல மென்மையாக்கிச் செல்கிறார்கள்…

இயல்பாயிருத்தல்

எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது?????
எப்போதும் போல முன்இரவில்
சென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.

நிரப்பப்படாத இடைவெளியில்
நாம் சாலையை கடக்க தவறினால்,
அந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.

பாதிக்கடலை நீந்தியதைப் போல,
பாதிக் கிணற்றைத் தாண்டியது போல,
பாதி பால்யத்தை வாழ்ந்தது போல
அந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.

மறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.

அச்சாலையைக் கடக்க உதவும்
சிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்
என் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…

அந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்
அல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்
அல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…

யாரென்றெனைத் தெரியாத சாலையில்
எனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்
அவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…
இப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.

இவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று!

அவசரமாக நெடுந்தூக்கம்

பாதிப்பகல் நேரத்தில்
தூங்கச் சென்றான்
இளவயது நண்பன், மரணத்தின் மடியில்…

இன்னும்
இரவில் நான் தூங்கச் செல்லும் போதெல்லாம்
அடுத்த நாளுக்கான அலாரம் வைக்கையில் யோசிக்கிறேன்
இந்தத் தூக்கத்தின் நீளம் எவ்வளவு தூரமாக இருக்குமென்று…!

பூமிவிரோதிகள்

உலகம்
தன் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு இருக்கிறது,
நாடுகள் தன் எல்லைகளை பெருக்கிக் கொண்டு இருக்கிறது.

இங்கு தேசவிரோதிகளை விட, பூமிவிரோதிகள் அதிகம்…

வாடகைக்கு ஒரு குருவிக் கூடு

இனிமேல் முடிந்தால்
ஒரு குருவியின் கூட்டைக் கட்ட வேண்டும்
இல்லையேல்
அதன் கூட்டில் வாடகைக்கேனும் செல்ல வேண்டும்…

உங்களில் யாருக்கேனும்
தெரிந்த குருவிகள் கூட்டில்
ஓரிடம் இருந்தால் எனக்குக் கேட்டுச் சொல்லுங்கள்.,

இதுவரை குருவிகளையும், அதன் கூடுகளையும்
கவனிக்காமல் இருந்தாலும் சரி ,
இனிமேலாவது கவனித்துச் சொல்லுங்கள்.

என்றாவது ஒருமுறை கவலைப் பட்டிருப்போமா…?
அடைமழைகளில் ,
சூறைக்காற்றுகளில்
குருவிகளின் கூடு என்னவாயிருக்கும் என்று?

இனிமேலாவது கவனியுங்கள்
நாளை அது நான் புகப்போகும் ஒரு வீடு …