Friends with Benefits

புதிதாகத் துணை வேண்டி ஒரு விளம்பரம்,

வயது 18 முதல் 28 வரையுள்ள
முன் அறிமுகம் இல்லாத முகங்கள் வேண்டும்.
ஒருவொருக்கு ஒருவராகச் சேர்ந்து
அவரவர் வருத்தங்களுக்காக நினைத்து நினைத்து
அழுக அனுமதி உண்டு….,

அனுமதித்த நேரம் வரை
இருவரும் இணைந்து அழுது கொள்ளலாம்,
ஒருவர் வருத்தங்களை மற்றவர்
கேட்கவோ வருத்தப்படவோ அனுமதி இல்லை,
அதற்கான அதற்கான தேவையும் இல்லை…

ஒருவரின் அழுகைக்கு
மற்றொருவர் அழுதபடி துணையாக இருப்பார்.

இன்றைய தேவை
அவரவர் வருத்தங்களோடு அழுதிட ஒரு கூட்டணி…!

என்னைப் போல் ஒருவன்

காலப்பெருவெளியில்
காணாமல் போகும்
அடையாளமில்லாத முகங்கள்,

கணினியிடம் மனிதர்களைப் பற்றியோ,
மனிதர்களிடம் கணினிகளைப் பற்றியோ பேசிக் கொண்டிருக்கும் அன்றாடங்கள்,

நாம் என்பதையும், நாளை என்பதையும் மிக அருகில் என்று கொண்ட புரிதல்கள்,

இப்படியான ஒருவனை
பேருந்திலோ,
இரயிலோ,
தெருவிலோ,
மால்களிலோ,
வீட்டுக் கண்ணாடியிலோ
எதிர்கொண்டு பார்க்க நேர்கையில், அவனின் நேர்பார்வையைத் தவிர்க்க எவ்வளவோ முற்படுகிறேன் நான்,

இவர்கள்
இதுவரை நான் மட்டும் தான்
இப்படி எனச் சந்தேகப்பட்ட
பலவற்றை பெரும்பான்மை கொண்டு பொய்யென்று நிரூபிக்கிறார்கள்,

இந்த உலகம் பற்றிய என் நம்பிக்கைகளை தகர்த்திடுகிறார்கள்,

நான் தவிர்த்ததை அவர்களும் தவிர்க்கிறார்கள்,
என் விருப்பத்தை அவர்களும் விரும்புகிறார்கள்,

திரும்பத் திரும்ப வரும் அன்றாடங்களால்,
எளிதில் என்னைச் சலிப்படையச் செய்துவிடுகிறார்கள் இவர்கள்…

என்னைப் போலவே இருக்கும் ஒருவனை எதிர்கொள்ள அச்சமாகத்தான் இருக்கிறது எனக்கு…

பூமிச் சுமை

சிறிதும்,
பெரிதுமான மனிதர்களை
பூமி சுமந்து கொண்டு தான் இருக்கிறது…

நான் கடவுள்

நான் தான் உங்களின் கடவுள், நம்பிக்கையாக உங்கள் கஷ்டங்களை என்னிடம் சொல்லுங்கள்,

என்றவாறு புதுப்புது போலிக் கடவுள்கள் வந்து செல்கிறார்கள்…
இப்போதெல்லாம்
இல்லாத கடவுள்கள் இருப்பதை விட,

சொல்லாத கஷ்டங்களை கேட்பதற்கு
ஒருவர் கடவுளாகத் தேவைப்படுகிறார்…

கண்ணீர் அஞ்சலி

அவசர அவசரமாக சேதி
வந்து சேர்கிறது அவனுக்கு உடனடித் தேதியுடன்,

அறக்கப்பறக்க அடுத்தவேலையை யாரிடமோ ஒப்படைத்துவிட்டு ஓடோடிச் சென்றானந்த அதிமுக்கிய வேலைக்காக,

அவன் சென்ற இடத்தில் செல்லாத க்யூ ஒன்று நிற்க, உயிர்போகும் அவசர காரணம் ஒன்றைச் சொல்லி முன்வரிசை முன்னுரிமை பெற்ற தருணத்தில்

இந்நாளுக்காக அவன் யோசித்து வைத்திருந்த வசனங்கள், பெரும் பேச்சுகள் எல்லாம் இப்போது மறந்து போக, யோசித்திட நேரமின்றி ஏதோ ஒன்றை எழுதிக் கொடுத்து புது முகவரிக்கு அவசரமாக அதைப் ப்ரிண்ட் எடுத்தனுப்ப சொல்லிவிட்டு,

அதே அவசரத்தில் சற்றுமுன் முன்பதிவு செய்யப்பட்ட இடுகாட்டில் அவன் சென்று படுத்துக் கொண்டதற்கும்,

அவன் விருப்பத்தில் ஆர்டர் பண்ணியிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஐந்து நிமிட தாமதத்தில் சரியாக வந்து சேர்ந்தது…

ஆகச் சிறந்த நம்பிக்கைகள்

எழ நினைத்து தவறி விழும் குழந்தை,

கடந்து செல்லும் இரயிலுக்கு கைகாட்டும் சிறுவன்,

விரல்விட்டு நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் குழந்தை…

வயதோடு வளராமல் விட்டுப்போன
ஆகச் சிறந்த
நம்பிக்கைகள் இவைகள்…

குறுக்கு வழியில் குழந்தைப் பருவம்

ஐஸ்கிரீம் சாப்பிட்ட நடுநிசி,

குடையில்லா தினங்களின் மழை,

ஸ்வீட் கடைக்கு முன் நிற்கும் முதற்சில நிமிடங்கள்,

அம்மாவின் மடியில் முந்தானைப் போர்வையில் சிறு தூக்கம்,

அப்பாவின் தட்டிலிருந்து
அவர் கைப்பிடி சாப்பாடு,

புகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காத அக்காவின் அக்கறைகள்…

இவையெல்லாம் குறுக்கு வழியில் குழந்தை பருவத்துக்கு கூட்டிச் செல்லும் வழித்தடங்கள்…

ஒவ்வொன்றும் ஒருவிதம்

கடும்புயல்,
பெருமழை,
சூறைக்காற்று,
ஆங்காங்கே அடைமழை, தூரல் என எல்லாம் எதிர்வந்து செல்கிறது…

யாருக்குத் தெரியும் எதிர்வருபவர் இதில் எதுவாக இருந்திடக்கூடுமென்று…

உலகம் பல வகைப் படுகிறது…!?

நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் அச்சிறுகுழந்தைக்கு அம்மா உலகம்,

நடந்து பழகிக்கொண்டிருக்கும் காதலர்களுக்கு அவ்விருவர் உலகம்,

நடந்து முடித்த மூத்தவர்களுக்கோ தானொரு தனியுலகம்…

இடைப்பட்டோருக்கு உலகம் எனப்படுவது
அவர்கள் நகரம்,
அவர்கள் ஊர்,
அவர்கள் குடும்பம்,
அவர்கள் அறை,
அவர்கள் தனியே மட்டும்…
உலகம் பல வகைப் படுகிறது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக…

மீளாமல் மூழ்கிட

மீளாமல் மூழ்கிட
கடலளவு மழை,
துளியளவு கண்ணீர்
போதுமானதாக இருக்கிறது….