அவசரம், இக்கவிதை தடைசெய்யப்பட உள்ளது

தடைசெய்யப்பட உள்ள ஓர் கவிதையை
நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.,

எழுதியவன்
இரண்டாம் முறை படித்துப்பார்த்து
இதைக் கிழித்தழிக்கும் முன் நீங்கள் இதைப் படித்துவிடுங்கள்…

இதை எழுதியவன் இச்சிறு வேளையில்.,

அவனுக்கில்லாத காதலிக்கு, காதல் மொழி எழுதிக் கொண்டிருக்கலாம்…,

அவனுக்கில்லாத வருத்தத்திற்கு, வருந்திக் கொண்டிருக்கலாம்…,

அவனின் வருத்தங்களைச் சொல்ல
அழகிய வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கலாம்…,

அடைமழையின் ஊடே கவிதைகளும் விழுந்திருக்குமா எனவெண்ணி புதுக்கவிதை தேடிக் கொண்டிருக்கலாம்…,

முன்பின் தெரியாத மனங்களின் இடையில் அவன் மனம் நசுங்கிக் கொண்டிருக்கலாம்…,

தெருவோரப் பூச்செடி பூவின் இதழோரம் அவன் இரசித்துக் கொண்டிருக்கலாம்…,

இரவுகளில் அவனை மூழ்கடித்துக் கொண்டிருக்கலாம்…,

ஆயிரம் வரிப் பொய்களின் நடுவே அவனின் அரைவரி உண்மையை அவனுக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கலாம்…,
அவனுக்கு சுயநினைவு வரும்வரை இக்கவிதை இங்கேயே இருக்கும், அதற்குள் படித்துவிடுங்கள் அவனுக்கும் முன்…

மீளாமல் மூழ்கிட

மீளாமல் மூழ்கிட
கடலளவு மழை,
துளியளவு கண்ணீர்
போதுமானதாக இருக்கிறது….

பறவை பிழைக்கிறது

கடல் மேல் ஒரு பறவை,
கரைமேல் நான் அதன் பார்வை,

அலைகளின் உயரத்திற்கேற்ப
அப்பறவை பறந்து கொண்டே இருக்கிறது,
நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

கரையில் நான் பார்வைக்கு ஓய்வு கொடுத்து, மீண்டும் பார்க்கையில் இன்னும் பறந்து கொண்டேயிருந்தது அப்பறவை.

நான் அங்கு பார்த்துக் கொண்டிருந்தேன்,
பறவை அங்கு பிழைத்துக் கொண்டிருந்தது…

முடிவிலிகள்

எந்தச் சந்திப்புகளும் முடிவிலியில்லை என்றிட்ட போதும், அதை உள்ளுணரா வரை சில சந்திப்புகளும், உள்ளுணர்ந்த வரை சில சந்திப்புகளும் சந்தோசம் கலந்த வருத்தங்களையும், வருத்தம் கலந்த சந்தோசங்களையும் எதிர்கொண்டு வந்து நிற்கிறது அகங்களில்…

முரண்பாடாக, முடிவிலிகள் தானே முழுமையாக்கிறது நம்மை…

மடிச்சுமை

பூமியின் மடியில்
விதையிட்ட மரம் பாரமில்லை…

கண்ணம்மா கவிதைகள்

சிக்கி முக்கி கற்காலத்தில் சிரமமில்லாமல் பற்ற வைத்தல் முதல் தீயை அவள் கண்களில் இருந்து…

என்றும் அவள் ஏவாள் தானெனக்கு…

#அவளதிகாரம்

விடியல் தேடி

கத்திய சத்தமில்லை,

செந்நிற கண்ணீர் துளியுமில்லை,
அணுப்பிளவின் ஆர்ப்பாட்டமில்லை,
துப்பாக்கிகளின் துணையில்லை,

ஏனோ அவ்விரவில் போர்க்களம் கண்டேன் விடியலுடன் – தனிமையில்….

தூண்டில் கண்கள்

தூவும் மேகங்களை தூண்டி இழுக்கும் தூண்டில்களாய் அவளது கண்கள்….

அவள் பார்வை பட்ட பாலைவனத்திற்கு பாதை தேடுகிறது மழை மேகங்கள்…