இருளில் மூழ்கிய இரவுகள்

இந்த இரவில் இன்னும் மிச்சமிருப்பது
நானும், விடியலும் மட்டுமே.

இவ்வுலகம் வழக்கம்போல
காலையில் கண் விழித்து
என்னோடு வீதி வந்து சேர்ந்துவிடும்.

இவ்வுலகம் நேற்று விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து கொள்ளும் தினந்தோறும்.

மீண்டும் மீண்டு மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்.

இப்போது இந்த உலகில் மிச்சமிருப்பது
நானும், இவ்இரவும் மட்டுமே.

வானிலை அறிக்கை – Weather Report

வாழ் நிலை அறிக்கையில்
புயல் எச்சரிக்கை.

மௌனப் புயலில் மெள்ளச் சாகும் மனிதர்கள்.

நிலா வரும் வழியில் வர இருக்கிறது இவ்இரவுப் புயல்.

மீதமிருக்கும் இப்பொழுதுக்குப் பின்
தாக்க வருகிறது இரவுகள் எனும்
பெரும் புயல்கள்.

இழப்பீடுகள் இல்லா இப்புயலுக்கு இரவுகள் என்று பெயர்.

வெறுமையின் நிறம் கருப்பு

அன்பிற்கோ,
அரவணைப்பிற்கோ,
துணைக்கோ,
தூக்கத்திற்கோ
என்றிந்த வறுமைக் கோட்டின்கீழ்
நிற்க இடமில்லாமல்
நசுங்கிக் கொண்டு வாழ வைத்து,

இரவுகள் மனிதனை எளிதில் ஏழையாக்கிவிடுகிறது…!

இரவின் கருப்பு போதியதாக இல்லை, மனித
இருப்பின் வெறுமையை காட்டிட…

இங்கு தூக்கம் விற்கப்படும்

பணப்பற்றாக்குறை,
வைட்டமின் பற்றாக்குறை போல

நகரில் திடீரென தூக்கம் பற்றாக்குறை ஆனது. தூக்கமில்லாத இரவுகளை இருள் சூழ்ந்திருந்தது.
வயதான ஒருத்தி டாக்டரிடம் தன் வேதனை வலி சொல்ல, தூங்கச் சொல்லி எழுதிக் கொடுக்கிறார் டாக்டர். தூக்கம் வாங்க எங்கு செல்வதென அவளுக்குத் தெரியவில்லை.

இரத்தம் முதல் இருதயம் வரை சுடச்சுட புதிதாக கிடைக்கிறது, ஆனால் தூக்கம் தர ஆளில்லை.

வெளியில் சென்று வரும்போது பார்த்தேன், தூக்கத்திற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தொழிலதிபர் ஒருவர் மெடிக்கல் முன் வியாபாரம் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் விற்க அவனிடம் தூக்கம் இல்லை.

வழியில் ஒருவன் கத்தியைக் காட்டி என்னை மிரட்டி தூக்கம் கொடுத்துவிட்டு போகச் சொல்லி மிரட்டுகிறான். நல்ல வேலையாக என் தூக்கத்தை வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றதால் என் தூக்கம் பிழைத்தது.

என்வயது நண்பன் ஒருவன் தூக்கத்திற்காக உயிரையே கூட தருவதாகச் சொல்கிறான்.

இங்கு தூக்கத்திற்காக உயிர்கள் எடுக்கப்படுவதாக பிரேக்கிங் நியூஸ் செய்திகள் வருகிறது.

தூக்கம் இங்கு விற்கப்படும் என போலியான வியாபாரம் தொடங்கப்பட்டுவிட்டன, ஆனால் யாருக்கும் தெரியவில்லை தூக்கத்தை எப்படி வாங்கிச் செல்வதென்று.

எங்கு பார்த்தாலும் தூக்கம் குறைந்து கொண்டே செல்கிறது, தூக்கம் உற்பத்தி செய்ய இன்னும் எந்த நாட்டு விஞ்ஞானிகளும் மாத்திரைகளோ, விஷமோ வெளியிடவில்லை.

ஐயோ! எனக்கும் தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. என்னிடம் மிச்சமிருக்கும் கொஞ்ச தூக்கத்தில் நான் தூங்கச்செல்கிறேன்…

பணப்பற்றாக்குறை,
வைட்டமின் பற்றாக்குறை போல

நகரில் திடீரென தூக்கம் பற்றாக்குறை ஆனது.
தூக்கமில்லாத இரவுகளை இருள் சூழ்ந்திருந்தது.
வயதான ஒருத்தி டாக்டரிடம் தன் வேதனை வலி சொல்ல, தூங்கச் சொல்லி எழுதிக் கொடுக்கிறார் டாக்டர். தூக்கம் வாங்க எங்கு செல்வதென அவளுக்குத் தெரியவில்லை.

இரத்தம் முதல் இருதயம் வரை சுடச்சுட புதிதாக கிடைக்கிறது, ஆனால் தூக்கம் தர ஆளில்லை.

வெளியில் சென்று வரும்போது பார்த்தேன், தூக்கத்திற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக தொழிலதிபர் ஒருவர் மெடிக்கல் முன் வியாபாரம் பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் விற்க அவனிடம் தூக்கம் இல்லை.

வழியில் ஒருவன் கத்தியைக் காட்டி என்னை மிரட்டி தூக்கம் கொடுத்துவிட்டு போகச் சொல்லி மிரட்டுகிறான். நல்ல வேலையாக என் தூக்கத்தை வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றதால் என் தூக்கம் பிழைத்தது.

என்வயது நண்பன் ஒருவன் தூக்கத்திற்காக உயிரையே கூட தருவதாகச் சொல்கிறான்.

இங்கு தூக்கத்திற்காக உயிர்கள் எடுக்கப்படுவதாக பிரேக்கிங் நியூஸ் செய்திகள் வருகிறது.

தூக்கம் இங்கு விற்கப்படும் என போலியான வியாபாரம் தொடங்கப்பட்டுவிட்டன, ஆனால் யாருக்கும் தெரியவில்லை தூக்கத்தை எப்படி வாங்கிச் செல்வதென்று.

எங்கு பார்த்தாலும் தூக்கம் குறைந்து கொண்டே செல்கிறது, தூக்கம் உற்பத்தி செய்ய இன்னும் எந்த நாட்டு விஞ்ஞானிகளும் மாத்திரைகளோ, விஷமோ வெளியிடவில்லை.

ஐயோ! எனக்கும் தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. என்னிடம் மிச்சமிருக்கும் கொஞ்ச தூக்கத்தில் நான் தூங்கச்செல்கிறேன்…

இரவின் நீளம்

எத்தனை
நூற்றாண்டுகளை,
உலகப் போர்களை,
மனிதர்களை,
பெரிய நெடுஞ்சாலைகளை,
விபத்துக்களை
கனவுகளை,
பொய்களை,
நிஜங்களைக் கடக்க வேண்டியதாயிருக்கிறது…
ஒரு இரவைக் கடந்து முடிப்பதற்குள்…

தவிர்த்திருத்தல்

இருள் மெல்லக்கவ்விய சாலையின் ஓரத்தில், நகர்பவர்களை வேடிக்கை பார்த்தபடி நகராமல் அமர்ந்திருந்தேன்.

அந்த மெல்இருட்டில் திடீரென ஒருவர் என் முன் நின்றார் அல்லது அப்போது தான் நான் அவரை அவ்வழியில் திடீரென கவனிக்கிறேன்.

என்னிடம் வந்த அவர் தன்னைக் கார்பரேட் கடவுள் என அறிமுகம் செய்து கொண்டார், பதிலுக்கு நானும் இந்தக் கார்பரேட்டின் ஒரு எச்சம் தானென அறிமுகம் செய்து கொண்டேன்.

கார்பரேட் சாம்பிராணிகள் மார்க்கெட்’க்கு வந்த சில நாட்களிலிருந்து கார்பரேட் சாமியார்கள் நாங்களும் உருவாக்கப்பட்டோம் என தொழில் வரலாறு பேசினார்.

என்னிடம் பதிலுக்கு ஏதோ எதிர்பார்த்திருக்கிறார் என நினைத்து பதில் தேடி நானும் மௌனமானேன்.

ஏதோ ஓர் கல்லூரி நிறுவன அதிபரின் வியாபார ஆசைப்படி அவர் கல்லூரியில் படிக்கப்பட்டு உருவான கம்ப்யூட்டர் என்ஜினியர் நான், இதில் என் விருப்பங்கள் வியாபாரமாக்கப்பட்டதை நினைத்தபடி இருந்தேன்.

எங்களின் தொடர் மௌனத்தைக் கடவுள் தன் தொண்டையைக் கனைத்தபடி கலைத்து என் அன்றாடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

என்னைப் பற்றி உனக்கெப்படி தெரியும் எனக் கேட்க நினைத்ததும், அவர் கடவுள் எனச் சொல்லியது ஞயாபகம் வர நான் மீண்டும் அமைதியானேன்.

சட்டென அவரின் செல்போன் சினுங்க, பாஸ்வேர்டு கொடுத்து செல்போன் சினுங்களை அணைத்து அதனிடம் பேச ஆரம்பித்தார். கடவுளே ஆனாலும் நம்ப மறுக்கிறது செல்போன். ஒருவேளை செல்போனுக்கு அவரிடம் ஆகவேண்டிய காரியம் ஏதுமில்லை என நினைத்துக் கொண்டேன்.

அந்த முன்னிரவில் அவரின் முன்னாள் தோழியிடம் இருந்து அழைப்பு வர, புன்முறுவலுடன் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தவர், ஒரு நிமிடம் அந்தப் பெண்ணிற்கான உலகத்தை Holdல் போட்டுவிட்டு என்னிடம் பேச்சைத் தொடர்ந்தார்.

என்னை எப்போதும் யாரோ ஒருவர் அழைத்துக் கொண்ட தான் இருப்பார்கள், இப்போதைக்கான அழைப்பு வந்துவிட்டது.

உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, என்ன வேண்டும் எனக் கேள் என்றார்.

என்னின் எந்தப்பிரச்சனைகளைத் தீர்க்கச் சொல்லி அவரிடம் கேட்பது எனக் குழம்பிய நான், என் எல்லாப் பிரச்சனைகளும் தீர ஒரு வழி சொல்லுங்கள் என்றேன்.

சற்றும் யோசிக்காத அவர்,

“தவிர்த்திருத்தல் ஒரு தவம்,
முடிவில் நீ, நீயாக கிடைப்பது அதன் வரம்” என்றபடி மறைந்தார்.

எதை, எப்படித் தவிர்க்கச் சொல்கிறார் என யோசித்தபடி என் அறைக்கு வந்து சேர்ந்தேன்.

தோழி ஒருத்தி அவளுக்கு வந்த Unknown ஹாய்’களைத் தவிர்த்ததாகச் சொல்லியிருந்தாள்,

நண்பன் ஒருவன் அவனின் இரவுகளின் தூண்டலைத் தவிர்த்ததாகச் சொல்லியிருந்தான்,

அவ்விரவில் மேகங்கள் என்மீது மழை பெய்யாமல் தவிர்த்திருந்தது.

இப்படி பதிலனுப்பப்படாத ஹாய் முதற்கொண்டு எத்தனையோ வழிகளில் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டது கண்டு கடவுளுக்கு பெரும்நன்றி சொல்லியதில்,

அந்நடு இரவில் திடீர் சத்தம் கேட்டெழுந்த என் நண்பன் ஒரு நிமிடம் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் மீண்டும் தூங்கப்போனான்.

கடவுள் வந்து சென்றது கனவென உணர்கையில்,
பேய்ப் பிடித்ததைப் போல உட்கார்ந்திருந்தேன் அவ்விரவில் நெடுநேரம்…

காதல் கவிஞர்கள் – ஓர் அறிமுகம்

காதல் கவிதை எழுதுபவனாக
இருப்பதன் நன்மைகளை கவிதையாக்குகிறேன்.,

இல்லாத காதலிகள்தான்
இன்னும் இன்னும் காதலிக்கச் சொல்கிறாள்கள்.

பேப்பரோ, பேனாவோ
அதீத காதலைச் சலித்துக் கொள்வதில்லை.

இவன் காதல் காகிதங்களை மட்டும்
காயப்படுத்துகின்றன.

எல்லோருக்கும் சேர்த்து இவன் காதலித்துக் கொண்டிருப்பான்.

முன்னனுபவம் இல்லாத
இவன் காதல் கவிதைகள்
அன்பில் தொடங்கி அன்பிலேயே முடிகின்றன.

கவிஞனின் காதல் தவறுகள் கவிதைகளிலேயே கண்டுபிடித்து திருத்தப்படுகின்றன.

ஆனால் என்ன அவன் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு தவறைச் செய்துகொண்டே தான் இருக்கப்போகிறான்.

காதல் கவிதை எழுதுபவனாக
இருப்பதன் கஷ்டங்களை
அடுத்த புத்தகமாக எழுதுகிறேன்…!

இயல்பாயிருத்தல்

எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது?????
எப்போதும் போல முன்இரவில்
சென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.

நிரப்பப்படாத இடைவெளியில்
நாம் சாலையை கடக்க தவறினால்,
அந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.

பாதிக்கடலை நீந்தியதைப் போல,
பாதிக் கிணற்றைத் தாண்டியது போல,
பாதி பால்யத்தை வாழ்ந்தது போல
அந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.

மறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.

அச்சாலையைக் கடக்க உதவும்
சிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்
என் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…

அந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்
அல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்
அல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…

யாரென்றெனைத் தெரியாத சாலையில்
எனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்
அவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…
இப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.

இவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று!

அவசரம், இக்கவிதை தடைசெய்யப்பட உள்ளது

தடைசெய்யப்பட உள்ள ஓர் கவிதையை
நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.,

எழுதியவன்
இரண்டாம் முறை படித்துப்பார்த்து
இதைக் கிழித்தழிக்கும் முன் நீங்கள் இதைப் படித்துவிடுங்கள்…

இதை எழுதியவன் இச்சிறு வேளையில்.,

அவனுக்கில்லாத காதலிக்கு, காதல் மொழி எழுதிக் கொண்டிருக்கலாம்…,

அவனுக்கில்லாத வருத்தத்திற்கு, வருந்திக் கொண்டிருக்கலாம்…,

அவனின் வருத்தங்களைச் சொல்ல
அழகிய வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கலாம்…,

அடைமழையின் ஊடே கவிதைகளும் விழுந்திருக்குமா எனவெண்ணி புதுக்கவிதை தேடிக் கொண்டிருக்கலாம்…,

முன்பின் தெரியாத மனங்களின் இடையில் அவன் மனம் நசுங்கிக் கொண்டிருக்கலாம்…,

தெருவோரப் பூச்செடி பூவின் இதழோரம் அவன் இரசித்துக் கொண்டிருக்கலாம்…,

இரவுகளில் அவனை மூழ்கடித்துக் கொண்டிருக்கலாம்…,

ஆயிரம் வரிப் பொய்களின் நடுவே அவனின் அரைவரி உண்மையை அவனுக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கலாம்…,
அவனுக்கு சுயநினைவு வரும்வரை இக்கவிதை இங்கேயே இருக்கும், அதற்குள் படித்துவிடுங்கள் அவனுக்கும் முன்…

தனிமை கவிதைகள்

பயமாகத் தான் இருக்கிறது
என்னை நானே
தனிமையில் எதிர்கொள்ள நினைக்கையில்…