காதல் கவிஞர்கள் – ஓர் அறிமுகம்

காதல் கவிதை எழுதுபவனாக
இருப்பதன் நன்மைகளை கவிதையாக்குகிறேன்.,

இல்லாத காதலிகள்தான்
இன்னும் இன்னும் காதலிக்கச் சொல்கிறாள்கள்.

பேப்பரோ, பேனாவோ
அதீத காதலைச் சலித்துக் கொள்வதில்லை.

இவன் காதல் காகிதங்களை மட்டும்
காயப்படுத்துகின்றன.

எல்லோருக்கும் சேர்த்து இவன் காதலித்துக் கொண்டிருப்பான்.

முன்னனுபவம் இல்லாத
இவன் காதல் கவிதைகள்
அன்பில் தொடங்கி அன்பிலேயே முடிகின்றன.

கவிஞனின் காதல் தவறுகள் கவிதைகளிலேயே கண்டுபிடித்து திருத்தப்படுகின்றன.

ஆனால் என்ன அவன் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு தவறைச் செய்துகொண்டே தான் இருக்கப்போகிறான்.

காதல் கவிதை எழுதுபவனாக
இருப்பதன் கஷ்டங்களை
அடுத்த புத்தகமாக எழுதுகிறேன்…!

இயல்பாயிருத்தல்

எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது?????
எப்போதும் போல முன்இரவில்
சென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.

நிரப்பப்படாத இடைவெளியில்
நாம் சாலையை கடக்க தவறினால்,
அந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.

பாதிக்கடலை நீந்தியதைப் போல,
பாதிக் கிணற்றைத் தாண்டியது போல,
பாதி பால்யத்தை வாழ்ந்தது போல
அந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.

மறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.

அச்சாலையைக் கடக்க உதவும்
சிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்
என் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…

அந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்
அல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்
அல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…

யாரென்றெனைத் தெரியாத சாலையில்
எனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்
அவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…
இப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.

இவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று!

அவளுடன் கவிதைகள் ஒருநாள்….!

அதிகாலை:

அந்நாளுக்கான முதல் பூ பூக்கிறது,
அவள் விழி இதழ் விரிதலில் இருந்து…
காலை:

எந்த வீட்டு வாசலில் வானவில் வாடிக்கையாக கோலம் போடுகிறது? அவள் வீட்டைத் தவிர…
அவள் சமையலில்:

வெட்பத்தில் பாதி, வெட்கத்தில் மீதி நெகிழ்கிறது காரக்குழம்பில் அவள் கிள்ளிப் போட்ட மிளகாய்…
அவள் விளையாட்டாக:

மீசை வைத்த மீன்கள்
தூண்டில் எட்டிப் பிடித்தது ,
ஆற்று நீரில் அவள் விரல்பட்டதும்…

தேவதைகளின் தேவதை:

அவளைப் போல் தேவதைகளிருந்தால், அதுவும் ஒருபுறம் இருந்துவிட்டு போகட்டுமே என ஏற்க வைத்தாள், கடவுள் நம்பிக்கை இல்லா ஊரில்…

மதியம்:

அவளுக்குக்
குடை பிடித்துச் செல்லும்
மேகங்கள் அன்பின் மழையை அடைமழையாய்ப் பெய்கிறது…

பிற்பகல்:

அவளின்
பிற்பகல் தூக்கம்
அவளுக்கானது,
அதன் கனவுகள் எனக்கானது…

மாலை:

அவளின் அன்றாட அவசரங்களில்
கலைந்த தலை முடிகளினூடோ,
கசங்கிய புடவைகளினூடோ,

குறைந்தது ஒரு கவிதையையேனும்
கொண்டு வருகிறாள் என்னெதிரில்…

எட்டு மணிச் செய்திகள்:

அவளின் அன்றாடங்கள்,
எனக்கான நாட்டு நடப்புகள்
இரவு நேரச் செய்தியில்…

முன்னிரவு:

விழித்துக் கொள்கிறது நட்சத்திரம்,
அவள் தூக்கம் கலைந்த இரக்கமற்ற இரவுகளில்…

அவள் அசதியாகத் தூங்கும் இரவுகளில்,
அசந்துபோய் பார்க்கிறேன்…
காலை முதல், காரிருள் வரை கவிதையாகவே வந்து செல்கிறாள் அவளெப்போதும்…

கண்கள் கவிதை

கருப்பு வானத்தில்
இருவெண் நிலாக்கள்
அவள் கண்களில்… விழியாக…!

பூ சூடிய பெயர்

கொஞ்சம் கர்வம் தான் அவளுக்கு..!

அவளைத் தவிர எந்தப் பூக்கள் தான் தனக்கெனத் தனிப் பெயர் சூடிக்கொள்கிறது…..?

எதுகை மோனை

எல்லாக் கவிதைகளும்

எதுகை மோனை கொள்வதில்லை,

சிலநேரங்களில் எதிர் அமர்ந்து

கொள்கின்றன படித்திடச் சொல்லி…

தூரப்பார்வை

பார்வையின் மறுமுனையில் இன்னும் எழுதிப் பார்க்காத கவிதையாக இருக்கிறாள் அவள்…

விழியின் வரிகள்

வரிவரியாகத் தேடியும்
கிடைக்கவில்லை,

அவள் விழி பேசும்

கவிதையின் வரிகள்…

ஏன் கவிதை

அவள் பேரழகா? என்றால், பெரும் ரசிகன் நானென்பேன்…