வயதான ஞாயிறு தினங்கள்

விடுமுறை என்பது

வீட்டில் யாருக்கும் தெரியாமல்போய் விளையாடுவதில் ஆரம்பித்து

காலை சாப்பாடோ, மதிய சாப்பாடோ மறந்துபோய் விளையாடுவது,

ஏதேனும் ஓர் ஊர் வம்பில் சிக்கி அன்றைய இரவின் ஊரில் தலைப்புச் செய்தியாவது,

யாரும் பார்த்திடாதபடி திரும்பவும் வீடு சேர்ந்து காலையில் விட்ட இடத்திலிருந்து தொடர்வது

என இருக்கும் இவைகள் ஞாயிறு தினங்களை விடுமுறை நாட்களாக்கின்றன.

இவையில்லாத தினங்கள்
முதிர்ந்த வயது ஞாயிறு
தினங்கள் மட்டும்…

இதற்கிடையில் நான்

நகரத்திலிருந்து கிராமம்,

ஹோட்டல் சாப்பாட்டிலிருந்து அம்மா, அக்காவின் சாப்பாடு,

அமேசான் கிண்டிலில் இருந்து காகித புத்தகம்,

கதவுகள் திறக்காத அறையிலிருந்து கதவுகளால் மூடாத கிராமம் வரை

முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் ஒரு அரை நூற்றாண்டின் இடைவெளி…

இதற்கிடையில் நான்.

கிழவிகள் கிராமத்தின் சொத்து

அத்துவானக் காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள் அந்தக் கிழவி,

அவளிடம் சென்று சேர்கையில் கடும் வெயில் என் கபாலம் தாண்டியிருந்தது.

என் புதுச் செருப்புகளைத் தாண்டி
வன்முறை வணக்கம் சொல்லியது வேலாமரத்து முள்.

நடந்து பழகிய தடமே இல்லாத அந்தக்காட்டில் கரடுமுரடுகளைக் கடந்து அந்தக் கிழவியைச் சேர்கையில், கல்லும் முள்ளும் மூன்று முறை என் காலின் இரத்தச் சுவை பார்த்திருந்தது.
முள் குத்தியதில் நொண்டி நடந்த என் காலைக் குனிந்து பார்த்து வல்லினமான வார்த்தைகளில் கிழவி சக்திக்கு மீறி பேசுகிறாள்.

இப்புடி மொட்ட வெயிலுல நீ பாக்கவராட்டி நா என்ன செத்தா போயிடப் போரேன் என ஆரம்பித்த அவளின் வசவுகள் உன்னையெல்லாம் பாக்கத் தான்டா இந்த ஒத்த உசுரக் கய்யில புடிச்சுட்டு ஆடுமாடுகளோட ஒன்னா அலையுறேன், பத்து போயிட்டு வா சாமி எனக் கூறி எங்களுக்கு வெயில் குடை பிடித்த சூரியனைப் போல உக்கிரமான பேரன்பைப் பெய்திருந்தாள்.

முழுவதும் வெயலில் நனைந்தபடி அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன், வரும் வழியில் என் கால்கள் அங்கிருந்த கற்களுக்கும், முட்களுக்கும் பழகியருந்தன.

வரலாற்றின் கணக்குப் புத்தகம்

மஞ்சள் பையில் சுற்றிவைக்கப்பட்டு,
மஞ்சளும், குங்குமம் கலந்து
பெருவிரலில் பாதி
ஆள்காட்டி விரலில் மீதி அள்ளி
அதன் நாலாபுறங்களிலும் தடவப் பட்டிருந்தது…

நான் இந்தப் பூமிக்கு வாடகைக்கு வாழ வந்தபோது யாரோ ஒருவர் அவசரவரசமாக எழுதிய என் வரவு,செலவு கணக்குகளின் வரலாற்றுப் புத்தகம் என அந்த நோட்டுப்புத்தகம் வரலாற்றுப் புத்தகமாக நம்பவைக்கப்பட்டது…

அச்சிறுவதுகளில் என்றாவது ஒருநாள் என்வரலாற்று புத்தகத்தை எனக்கு தொடவும், பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். காரணம் தெரியாத ஓர் ஈர்ப்பு அப்புத்தகத்தைச் சுற்றி மனதில் இருந்து கொண்டே இருக்கும், அந்த நிமிடச் சந்தோசத்திற்காக அப்புத்தகத்தை தொட்டுப் பார்க்கையில் அவ்வயதின் “ரேங்க் கார்டை”ப் பார்ப்பதைப்போல ஏதோவோர் பயம், பரபரப்பு, ஆர்வம் எல்லாம் என்மீது வந்தமர்கிறது. சட்டென புத்தகத்தின் பாதிக்கு மேலான பக்கங்களில் திருப்பி நான் வாழப்போகும் வாழ்கையை கூட தேடிப்பார்த்திட நினைத்தது உண்டு. அச்சிறு வயதில் வண்ணங்களைத் தவிர அந்தப் புத்தகத்தில் ஏதும் புரிந்ததில்லை. அவ்வளவு சீக்கிரம் எந்தக் கஷ்டங்களும் கடந்திட வாய்ப்பளிப்பதேயில்லை.

வருடங்களுக்கு சில வயது
ஆனதிற்குப் பிறகு,
விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற எனக்கு, நேற்றைய பகலில் எதேச்சையாக அப்புத்தகம் கண்முன் கிடந்தது,

மீண்டும் அந்த ஒரு நிமிட போலிச் சந்தோசத்திற்காக அந்தப் புத்தகம் என்னைத் திறந்து பார்க்கத் தூண்டிச் சிரிக்கிறது…

இதுபோல எத்தனை எத்தனையோ போலி
ஒரு நிமிடங்களை நான் தவிர்க்க வேண்டி இருக்கிறது.

நினைத்துப் பார்த்தால் இதுபோன்ற போலி நிமிடங்கள் எனது உண்மையான நிமிடங்களை விட அதிகமாக இருக்கிறது.

இயல்பாயிருத்தல்

எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது?????
எப்போதும் போல முன்இரவில்
சென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.

நிரப்பப்படாத இடைவெளியில்
நாம் சாலையை கடக்க தவறினால்,
அந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.

பாதிக்கடலை நீந்தியதைப் போல,
பாதிக் கிணற்றைத் தாண்டியது போல,
பாதி பால்யத்தை வாழ்ந்தது போல
அந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.

மறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.

அச்சாலையைக் கடக்க உதவும்
சிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்
என் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…

அந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்
அல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்
அல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…

யாரென்றெனைத் தெரியாத சாலையில்
எனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்
அவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…
இப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.

இவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று!

ஆகச் சிறந்த நம்பிக்கைகள்

எழ நினைத்து தவறி விழும் குழந்தை,

கடந்து செல்லும் இரயிலுக்கு கைகாட்டும் சிறுவன்,

விரல்விட்டு நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் குழந்தை…

வயதோடு வளராமல் விட்டுப்போன
ஆகச் சிறந்த
நம்பிக்கைகள் இவைகள்…

குறுக்கு வழியில் குழந்தைப் பருவம்

ஐஸ்கிரீம் சாப்பிட்ட நடுநிசி,

குடையில்லா தினங்களின் மழை,

ஸ்வீட் கடைக்கு முன் நிற்கும் முதற்சில நிமிடங்கள்,

அம்மாவின் மடியில் முந்தானைப் போர்வையில் சிறு தூக்கம்,

அப்பாவின் தட்டிலிருந்து
அவர் கைப்பிடி சாப்பாடு,

புகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காத அக்காவின் அக்கறைகள்…

இவையெல்லாம் குறுக்கு வழியில் குழந்தை பருவத்துக்கு கூட்டிச் செல்லும் வழித்தடங்கள்…

கோபத்தில் வெயில்

இனியும் எரிப்பதற்கு புதிதாக எதுவும் இல்லை,

தன்னைத் தானே அங்கு எரித்துக் கொள்கிறது – கிராமத்தின் வெயில்.

ஆழ்துளை

அவள்மேல் ஆயிரம் துளைகளிட்டாலும் அவள் மடியில் கண்ணீர் இல்லை