என் மென் கூடு

அலை மோதி உடையாத கூடு இங்கிருக்க,
நுரை மோதி உடைகிறதென் மென் கூடு.

கடல் சேர்தல் என்பது

ஒரு வேடிக்கை பார்ப்பவனாக,
ஒரு தேசாந்திரியாக,
ஒரு பார்வையாளனாக,
ஒரு பறவையாக,
ஒரு ஏதேனும் ஒருவனாக

கரை அமர்ந்து கடல் பார்க்கையில், இப்பெரும் கடலையும் உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது, அன்பின் சிறுகூடடைவதில் திருப்தியடையும் பெரும்மனது போல.

எப்பொழும் கடல் சேர்தல் என்பது கரை சேர்வதாக முடிகிறது எனக்கு.

அழு அதன் ஆழம் வரை!

அவ்வளவு எளிதில் வாய்ப்பதில்லை, முழுமையான அழுகையை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.

மனம் மகிழ்வதைப் போல
மனம் வருந்தல் எளிதில் நிகழ்த்திவிட முடிவதில்லை…

இடம் பொருள் ஏவல் என எல்லாம் பார்க்கவேண்டியதாயிருக்கிறது…

இழந்ததை நினைத்து அழவோ,
இருப்பதை நினைத்து அழவோ, இனிவருவது நினைத்து அழவோ,

என ஒரு பெரும் காரணம்,
கொடும் வலி, நெடும் நேரம், ஒற்றைத் தனிமை எல்லாம் ஒருசேரத் தேவைப்படுகிறது இதற்கு…

இவையெல்லாம் மொத்தமாய்க் கிடைக்கும் அரிய நிகழ்வுக்கு காத்திருக்கையில், அழுகைக்கான அத்தனை காரணங்களும் நமத்துப் போய்விடுகின்றன உள்மன ஈரங்களில்…

அன்றாடம் அழும் இச்சமூகம் இன்னும் அழுகையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முயல்வதே இல்லை…

யாரேனும் அழுதாலோ, அழுக முற்பட்டாலோ, அதீத கேள்விகள் ஏதுமின்றி முழுவதுமாக அழ உதவிடுங்கள். அழுது முடித்ததும் அணைத்துத் தேற்றிக் கொள்ளலாம், அதுவரை நிம்மதியாக அவர்கள் ஆழ அழுது மீளட்டும்…

தூக்கம் கெடுத்த கொசு

தூக்கமில்லா இரவுகளில் துணைக்கு வந்தமரும் கொசு,
இரவின் பெருவலியை தன்னளவு சிறியதாக மாற்றிவிடுகிறது…

கடல் சூழ் உலகிது

எத்தனிமையில், எவ்விடத்தில் யார் இருப்பினும், ஏதோவொரு தூரத்தில் பேரன்பும், பெருங்கடலும் சூழ் உலகிது.

அலையாய் அவ்அன்பின் கடல் சேர்கையில், கரை சேர்கிறோம் நாம்…

மழை எனக்கு நீர்த்துளி மட்டுமல்ல

கண்ணாடி ஜன்னலுக்கு முன்னும், பின்னும் மழையும், நானும்.

ஜன்னலின் முன் மழை பெய்துகொண்டிருக்கிறது.
ஜன்னலின் பின், நான் நனைந்துகொண்டிருக்கிறேன்.

ஜன்னலைக் கடந்த காற்று எனக்கு மழையாகிறது.

மழை எனக்கு நீர்த்துளி மட்டுமல்ல, காற்றும்.

ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம் – ஒரு மாடர்ன் ராஜா கதை

வாழ்க்கைல விளையாடி முடிச்ச ஒரு தாத்தா,
விளையாட்ட வாழ்க்கையா வச்சிருக்க ஒரு விளையாட்டுக்காரன்,
இவங்க ரெண்டு பேர் கூட விளையாட்டுப் பையனொருத்தன். இப்படி மூனு தலைமுறையில இருந்து ஒவ்வொருத்தரும், ஒரு நேரத்துல ஒரு அனுபவத்துல வாழ்க்கையில நேரடியா, மறைமுகமா சந்திக்கிறாங்க…

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு, அந்த ராஜாவுக்கு ரெண்டு கொழந்தைக இருந்தாங்களாம்னு ஆரம்பிச்ச கதைகள மாதிரி இவங்க மூனு பேர் பத்தின மாடர்ன் ராஜா கதை இது.

மொட்ட வெயிலுக்குக் கூட ஊருப்பக்கம் ஒதுங்காத மேகமெல்லாம் இந்த தாத்தாவும், பேரனும் இருந்த ஊரச்சுத்தி மெதந்ததுநால ஞாபக மறதில பெய்யுற மழை மட்டும் தான் அந்த ஊருக்கு வந்துட்டு போயிட்டு இருந்துச்சு. அந்த ஊர்ல இருந்த நிறைய குடைகளுக்கு இதுதான் கடைசி காலம், ஒரு புயலவோ, அடைமழையவோ பாத்துட்டா அது போதும்ங்குறது அந்த கருப்புக்குடைகளோட கடைசி ஆசையா இருந்துச்சு. மழை மறந்துபோன அந்த ஊருல வாழ்க்கைய விளையாடி முடிச்ச ஒரு தாத்தனும், அந்த நாட்டுல விளையாட்டவே வாழ்க்கையா வச்சிருக்க விளையாட்டுக்காரன் ஒருத்தனும், இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல விளையாட்டு பையனொருத்தனும் இருந்தாங்களாமான்னு சொல்லி ஆரம்பிக்கலாம்.

Read full post here

MicroBlog #1

இரயிலிலோ, பேருந்திலோ ஜன்னலோரமா உக்காந்து வேடிக்கை பாக்குறப்போ பாஸ்ட் ஃபார்வேடு மோடுல உலகத்தை சுத்தி விட்டுப் பாத்துக்குறோம். இரவுகள கிழிச்சிட்டுப் போற பயணத்துல, நிலாக்கள் வழித்துணையா வந்துகிட்டே தான் இருக்கு எங்கயும், எப்பவும்.

முட்ட முட்ட முழிக்கிற குழந்தையோட கண்ணு ரெண்டையும் முழிகொட்டாம பாத்துக்கிட்டே இருக்கிற மாதிரி, தூங்குற குழந்தை தூக்கத்துலயே சிரிக்கிறத பாக்குற மாதிரி, தூங்கி எந்திருச்ச குழந்தைய இன்னும் கொஞ்சம் தூங்கு நான் பாத்துட்டே இருக்கேன்னு மறுபடியும் தூங்க வைக்கிற மாதிரித்தான் நிலாவ பாக்குறதும். (சற்றுமுன் வந்த குழந்தைகள் அனைத்தும் சற்று வளர்ந்த முன்னாள் குழந்தைகளாகவும் தெரியலாம், அது படிப்பவரைப் பொறுத்தது)

நிலாக்களோட நிழல் பூமி மேல விழுறப்போ இந்த உலகம் அவ்வlove அழகாகிப்போயிருது. இப்படியான அழகியல்களைப் பாக்க உலகம் இன்னும் பல இரவுகள் காத்திருந்து, பார்த்திருக்கும். இப்போதைக்கு இந்த உலகம் அழிஞ்சிடாது, ஒன்னும் பாதிப்பில்லை. நாளைக்குப் பாத்துக்குவோம்.

நாளை என்றொரு நாள்

தட்டியும் திறக்காத கதவுகள்,
பதில் தேடிக் காத்திருக்கும் கேள்விகள்,
சொல்லி முடிக்காத விருப்பவெறுப்புகள்,
பேசிட அழைக்காத தொடர்புகள்,
அழைத்தும் பேசிடாத தொடர்புகள்,
நிலவை விலகி நிற்கும் இரவுகள்,

இவையெல்லாம்
நாளை என்ற நாளுக்காக
மீதியிருக்கும் காத்திருப்பை மிச்சம் வைத்திருக்கிறது…