தனிமை இரசிகர்கள்

எவ்வளவு கவனமாக
மூடிவைத்தாலும் அந்தரங்க இரகசியங்கள் எளிதில் வெளிப்பட்டு விடுகின்றன தனிமையில்…

உண்மையைச் சொல்லப் போனால் எனைத்தவிர யாருமில்லா தனிமையில் என்னை யாரோ அகம் புறமாக முழுவதுமாகப் பார்ப்பதாக உணர்கிறேன்…

என் வழியில் ஓர் பட்டம்

வழக்கம் போல காலையில்
கடல் சேர்ந்திருந்தேன்,

துடிக்கும் மனம் போல விடாமல் துடிதுடித்துக் கொண்டிருந்தது கடலலை,

உயிர் தப்பிக்கும் இடைவெளியில் அலைகளுடன் தொட்டு விளையாடிக் கொண்டிருக்கையில்,

மேல் சென்ற பட்டம்
பறக்கையில் இறக்கையிழந்த பறவை போல சட்டென என்முன் தரைவிழுக,

தூரத்திலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்த சிறுவன் விழுந்த பட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்துப் பறக்க வைத்துக் கொண்டிருந்தான்.
என்முன் வீழ்ந்த பட்டம் போல
யாரும் யாரையும் இங்கு சேர்வதுமில்லை, பிரிவதுமில்லை, சந்தித்தல் அவ்வளவே.

Shift+Delete

ஒரு உறவை,
ஒரு அறிமுகத்தை,
ஒரு நினைவுகளை,
ஒரு உரையாடலை,
ஒரு தொடர்பு எண்ணை
மொபைல் போனிலிருந்து டெலிட் செய்யப்படுவது போல
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை

மனதிலிருந்து ஒவ்வொன்றாக டெலிட் செய்ய முயற்சிக்கையில்…

இரவின் நீளம்

எத்தனை
நூற்றாண்டுகளை,
உலகப் போர்களை,
மனிதர்களை,
பெரிய நெடுஞ்சாலைகளை,
விபத்துக்களை
கனவுகளை,
பொய்களை,
நிஜங்களைக் கடக்க வேண்டியதாயிருக்கிறது…
ஒரு இரவைக் கடந்து முடிப்பதற்குள்…

வேடம் தாங்கிய பறவைகள்

நகரத்தில் புதிதாக வந்திருக்கும் பறவைகள் இவர்கள்,

சந்தோசங்களைக் கொண்டு வரும் தேவதூதர்கள் இவர்கள்,

சந்தோசங்களை, தேவைகளை, அவசரங்களை ஓரிடத்தில் இருந்து வேறிடம் கடத்துகிறார்கள்.

பூக்களைச் சுமக்கையில் அவற்றின் வாசனைகளை இவர்கள் சுவாசிப்பதில்லை,
முதலாளித்துவ முரட்டுத்தனங்களும் அடிமைத்தன ஆசைகளும் இந்நகரத்தில் யாரோ ஒருவரால் இவர்கள் மீது செலுத்தப்பட்டிருக்கும்,

எந்த நிமிடத்திலும் யாராவது ஒருவரால் கண்காணிக்கப்படுபவர்களாக

இருக்குமிவர்களுக்கு ப்ரைவசியென்ற ஒன்று இருந்தாக இல்லை,

கொண்டுவரும் பொருளுக்கேற்ப சந்தோசமாகச் சிரித்துக் கொண்டோ, வருத்தமான முக உணர்ச்சிகளையும் சேர்த்து டெலிவர் பண்ண வேண்டிய தேவையில்லாததால், இவர்களெப்போதும் உணர்ச்சியற்ற அல்லது ஒரே உணர்ச்சியுள்ள முகத்திலேயே டெலிவரி செய்கிறார்கள்.
அந்த அடைமழை இரவில்
எனக்கு உணவு கொண்டு வந்தவர்,
சாரி சார், மழை நல்லாப் பெய்யுது. அதான் டெலிவரி கொஞ்சம் லேட் ஆயிருச்சு எனச் சொல்லியபடி உணவை என் கை மாற்றினார்.

தேங்க்ஸ் ப்ரோ, பாத்துப் போங்க எனச் சொன்னதும் பதிலுக்கு ஒரு சிறு சிரிப்பை திருப்பி டெலிவரி செய்துவிட்டு மழையில் நனைந்தபடி இருந்த வண்டிக்குச் சென்றார். அடைமழைக் குளிரிளும் அவர் கை பிடித்திருந்த சாப்பாட்டுப் பொட்டலம் சூடாக இருந்தது.

திரும்ப என் அறைக்கு வந்து பார்க்கையில் இந்த டெலிவரிக்கு எத்தனை ஸ்டார் கொடுப்பீர்கள் என ஐந்து ஸ்டார்களை மட்டும் வைத்துக் கொண்டு கேட்கிறது என் மொபைலுக்குள் தங்கியிருக்கும் அவருடைய எஜமான்.

அர்த்தமற்ற வருத்தம் தான்
டெலிவரி பையன்கள் மீது எனக்கெப்போதும்…

முன்பதிவு இல்லாத பயணம்

அந்த ஊரிலிருந்து
புறப்படும் கடைசிப் பேருந்து அது,

எங்கு போகும், எப்போது போய்ச்சேரும் எனத் தெரியாது,

வாழ்வின் பயணத்தை நீட்டிக்க கிடைத்த கடைசி வாய்ப்பு அது,

ஓடுவதற்கு ஒரு தூரமோ,

தேடுவதற்கு ஒரு தொலைதலோ இல்லாத அக்கணத்தில் ஆரம்பிக்கிறது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெரும் பயணத்தின் தொடக்கம்…

அப்பாவின் ஸ்பிரிங் சேர்

என் குடும்பத்திற்கும் எனக்குமான இடைவெளி 300 கிலோமீட்டர் தாண்டியது. தினமும் பேசிடும் மூன்று நிமிடங்கள் அந்த முந்நூறு கிலோமீட்டர் தூரங்களைக் காற்றில் கறைத்து விடுகிறது.

அன்றைய காலை ஆபிஸ் செல்லும் வழியில் ஒரு பெரியவர் உதவிக்காக எனைக் கூப்பிட்டு தான் வண்டியில் உட்கார்ந்ததும் பக்கத்திலிருந்த ஸ்பிரிங் சேர் எடுத்து வண்டியில் வைக்க வேண்டி கேட்டுக் கொண்டார்.
அப்பா வீட்டில் உட்கார்ந்திருந்த
அதே சேரின் கலர்,
அதே சேரின் உயரம்,
என அப்பா உட்காந்திருந்த அதே சேராக இந்தச் சேர் இருந்தது.

முந்நூறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அப்பாவின் சேராக இது இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அப்பாவின் சேர் போல பத்திரமாக வைக்கச் சொல்கிறது மனம்.

வயதான ஞாயிறு தினங்கள்

விடுமுறை என்பது

வீட்டில் யாருக்கும் தெரியாமல்போய் விளையாடுவதில் ஆரம்பித்து

காலை சாப்பாடோ, மதிய சாப்பாடோ மறந்துபோய் விளையாடுவது,

ஏதேனும் ஓர் ஊர் வம்பில் சிக்கி அன்றைய இரவின் ஊரில் தலைப்புச் செய்தியாவது,

யாரும் பார்த்திடாதபடி திரும்பவும் வீடு சேர்ந்து காலையில் விட்ட இடத்திலிருந்து தொடர்வது

என இருக்கும் இவைகள் ஞாயிறு தினங்களை விடுமுறை நாட்களாக்கின்றன.

இவையில்லாத தினங்கள்
முதிர்ந்த வயது ஞாயிறு
தினங்கள் மட்டும்…

தாலாட்டு

உயிர்களின்
அழுகை, சிரிப்பின்
தாலாட்டில் தூங்கி எழுகிறது பூமி