அப்பாவின் ஸ்பிரிங் சேர்

என் குடும்பத்திற்கும் எனக்குமான இடைவெளி 300 கிலோமீட்டர் தாண்டியது. தினமும் பேசிடும் மூன்று நிமிடங்கள் அந்த முந்நூறு கிலோமீட்டர் தூரங்களைக் காற்றில் கறைத்து விடுகிறது.

அன்றைய காலை ஆபிஸ் செல்லும் வழியில் ஒரு பெரியவர் உதவிக்காக எனைக் கூப்பிட்டு தான் வண்டியில் உட்கார்ந்ததும் பக்கத்திலிருந்த ஸ்பிரிங் சேர் எடுத்து வண்டியில் வைக்க வேண்டி கேட்டுக் கொண்டார்.
அப்பா வீட்டில் உட்கார்ந்திருந்த
அதே சேரின் கலர்,
அதே சேரின் உயரம்,
என அப்பா உட்காந்திருந்த அதே சேராக இந்தச் சேர் இருந்தது.

முந்நூறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் அப்பாவின் சேராக இது இருக்க வாய்ப்பில்லை என்றாலும், அப்பாவின் சேர் போல பத்திரமாக வைக்கச் சொல்கிறது மனம்.

குறுக்கு வழியில் குழந்தைப் பருவம்

ஐஸ்கிரீம் சாப்பிட்ட நடுநிசி,

குடையில்லா தினங்களின் மழை,

ஸ்வீட் கடைக்கு முன் நிற்கும் முதற்சில நிமிடங்கள்,

அம்மாவின் மடியில் முந்தானைப் போர்வையில் சிறு தூக்கம்,

அப்பாவின் தட்டிலிருந்து
அவர் கைப்பிடி சாப்பாடு,

புகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காத அக்காவின் அக்கறைகள்…

இவையெல்லாம் குறுக்கு வழியில் குழந்தை பருவத்துக்கு கூட்டிச் செல்லும் வழித்தடங்கள்…

அப்பா ஓர் பெருங்கவிதை

என்றும் மாறாத அதே வரிதான்,
ஆயினும் என் வயதுகளினூடே உன் புரிதலும் வளர்கிறது உமைப் படிக்கும் பொழுதெல்லாம்….

அப்பா, நீர் ஓர் பெருங்கவிதை…

கடவுளும் தூங்கிடுதோ

அவள் துயிலழகியலில்,
துயிலெழுப்பாமல் திரும்புகிறேன் அவளின் எட்டு மணி அதிகாலையில்…

#மகளதிகாரம்

உன் கோபம் என் சாயல்

என் மகள் கோபத்தில் என் சாயல் தெரிவதாகச் சொல்கையில் தான் தெரிகிறது எவ்வளவான கோபக்காரன் நான் என்று…

#மகளதிகாரம் #தாயுமானவர்

ஆறாந்திணை – அப்பா அதிகாரம்

ஐந்திணை பாட மறந்த பாட்டுடைத் தலைவனவன்…

என் ஆறாம் திணையின் பாட்டுடைத் தலைவனாக – என்னுள் அதிகாரமாய் அப்பா…
#தாயுமானவர்