பூமிவிரோதிகள்

உலகம்
தன் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு இருக்கிறது,
நாடுகள் தன் எல்லைகளை பெருக்கிக் கொண்டு இருக்கிறது.

இங்கு தேசவிரோதிகளை விட, பூமிவிரோதிகள் அதிகம்…

வாடகைக்கு ஒரு குருவிக் கூடு

இனிமேல் முடிந்தால்
ஒரு குருவியின் கூட்டைக் கட்ட வேண்டும்
இல்லையேல்
அதன் கூட்டில் வாடகைக்கேனும் செல்ல வேண்டும்…

உங்களில் யாருக்கேனும்
தெரிந்த குருவிகள் கூட்டில்
ஓரிடம் இருந்தால் எனக்குக் கேட்டுச் சொல்லுங்கள்.,

இதுவரை குருவிகளையும், அதன் கூடுகளையும்
கவனிக்காமல் இருந்தாலும் சரி ,
இனிமேலாவது கவனித்துச் சொல்லுங்கள்.

என்றாவது ஒருமுறை கவலைப் பட்டிருப்போமா…?
அடைமழைகளில் ,
சூறைக்காற்றுகளில்
குருவிகளின் கூடு என்னவாயிருக்கும் என்று?

இனிமேலாவது கவனியுங்கள்
நாளை அது நான் புகப்போகும் ஒரு வீடு …

பைத்தியம்

யாரும் பேசிக்கொள்ளாத அந்த ஊரில்
அவன் மட்டும் யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தான்…,

அளவோடு சிரிக்கும் ஊரில் அவன் மட்டும் அதிகமாக சிரித்துக் கொண்டிருந்தான்,

கையில் கிடைத்ததையெல்லாம் குப்பைகளாக்கிக் கொண்டிருந்த கூட்டத்தில், குப்பையிலிருந்து ஏதோவொன்றை அவன் எடுத்துக் கொண்டிருந்தான்…,

எல்லாவற்றையும்
சரியாகச் செய்யும் இவன்
அந்த ஊரின் பைத்தியமாக இருப்பானென்ற சந்தேகம் வருகிறது எனக்கிப்போது…

பூமிச் சுமை

சிறிதும்,
பெரிதுமான மனிதர்களை
பூமி சுமந்து கொண்டு தான் இருக்கிறது…

நான் கடவுள்

நான் தான் உங்களின் கடவுள், நம்பிக்கையாக உங்கள் கஷ்டங்களை என்னிடம் சொல்லுங்கள்,

என்றவாறு புதுப்புது போலிக் கடவுள்கள் வந்து செல்கிறார்கள்…
இப்போதெல்லாம்
இல்லாத கடவுள்கள் இருப்பதை விட,

சொல்லாத கஷ்டங்களை கேட்பதற்கு
ஒருவர் கடவுளாகத் தேவைப்படுகிறார்…

அலட்சியமாக

தேநீர் தன் வெப்பத்தை இழப்பது போல,

யாரும் கவனிக்காமல் தவறிவிழும் தண்ணீர்த் துளிகள் போல,

மிகச் சாதாரணமாக நகரும்
பெரும் கூட்டம் போல,

எளிதில் வெற்றிடம் நிரப்பப்படும் பேருந்தின் இருக்கை போல,
மரணம் மிகச் சாதாரணம்…!
நாளை
நமக்கென அழுவதற்க்கென,
இன்று சிலரை சிரிக்க
வைத்துக் கொண்டிருக்கிறோம்…

அவசரம், இக்கவிதை தடைசெய்யப்பட உள்ளது

தடைசெய்யப்பட உள்ள ஓர் கவிதையை
நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.,

எழுதியவன்
இரண்டாம் முறை படித்துப்பார்த்து
இதைக் கிழித்தழிக்கும் முன் நீங்கள் இதைப் படித்துவிடுங்கள்…

இதை எழுதியவன் இச்சிறு வேளையில்.,

அவனுக்கில்லாத காதலிக்கு, காதல் மொழி எழுதிக் கொண்டிருக்கலாம்…,

அவனுக்கில்லாத வருத்தத்திற்கு, வருந்திக் கொண்டிருக்கலாம்…,

அவனின் வருத்தங்களைச் சொல்ல
அழகிய வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கலாம்…,

அடைமழையின் ஊடே கவிதைகளும் விழுந்திருக்குமா எனவெண்ணி புதுக்கவிதை தேடிக் கொண்டிருக்கலாம்…,

முன்பின் தெரியாத மனங்களின் இடையில் அவன் மனம் நசுங்கிக் கொண்டிருக்கலாம்…,

தெருவோரப் பூச்செடி பூவின் இதழோரம் அவன் இரசித்துக் கொண்டிருக்கலாம்…,

இரவுகளில் அவனை மூழ்கடித்துக் கொண்டிருக்கலாம்…,

ஆயிரம் வரிப் பொய்களின் நடுவே அவனின் அரைவரி உண்மையை அவனுக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டிருக்கலாம்…,
அவனுக்கு சுயநினைவு வரும்வரை இக்கவிதை இங்கேயே இருக்கும், அதற்குள் படித்துவிடுங்கள் அவனுக்கும் முன்…

அது “பணம்”

அது
அந்தச் சிறுவனுக்கு
அவன் நினைத்திருந்த
எல்லா விளையாட்டுப் பந்துகளையும் வாங்கிக் கொடுத்திருக்கும்,

அது
அந்த வேளையில்லா இளைஞனுக்கு
அவனுடைய அடுத்த நாளுக்கான சாப்பாட்டையோ அல்லது அடுத்த வேலைக்கான அப்ளிகேசனையோ வாங்கிக் கொடுத்திருக்கும்,

அது
அந்த வேளையிலுள்ள இளைஞனுக்கு
அவன் சற்றுமுன் நினைத்த ஏதோ ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கும்,

அது
அந்த அம்மாவிற்கு
அம்மாவின் பையனுக்கு
புதுத்துணி வாங்கிக் கொடுத்திருக்கும்,

அது
அந்தக் கிழவனுக்கு
மருந்துருவில் உயிரையே கூட
வாங்கிக் கொடுத்திருக்கும்.,

இங்கு பணம் இருப்பதை விட
“அது” பற்றிய தத்துவங்கள் மட்டும் அதிகமாக இருக்கிறது…

நானும், இரயிலும்

அதே இடம்,
அதே தடம்,
அதே நேரம் என
திரும்பத்திரும்ப
வந்து செல்லும் அந்த இரயில்
அவ்விடம் தாண்டி வேறெங்கும் செல்லவில்லையென சிலகாலம் கழித்தும்,

இரயில் போல நானுமெங்கும் செல்லவில்லை என்பதை
வெகுகாலம் கழித்தே கண்டுபிடித்தேன்…

ஓடோடும் நாம்
நகரவில்லை
வெகுகாலமாக…

மனதின் எடை

உடலைச் சேராத
ஒரு எடை,
ஒவ்வொரு வயதுகளிலும்
கூடிக்கொண்டே செல்கிறது –

யார்தான்
சுமக்கவில்லை
சிலுவைகளை மனங்களில்…