மனச்சடங்குகள்

ஹாய், ஹலோவில் தொடங்கி,
ஹவ் ஆர் யூ? ஐயம் ஃபைன்’ஐ நம்புவதெல்லாம்
மூடநம்பிக்கையின் அறிவியல் வளர்ச்சி…

மனதின் நிர்வாணங்கள்

அந்த இரவோடு மறந்திடப் போகும் முகங்களைச் சந்திப்பது போல்
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை நம்முன் நிர்வாணமான மனது கொண்டவர்களைச் சந்திப்பது.

அவர்களைச் சுற்றியிருந்த பொய்களைக் கலைத்து எறிந்துவிட்டுப் பார்க்கையில்,
அவர்களின் எடை கூடிச் செல்கிறது.

மனதின் நிர்வாணங்களைச் சந்திக்கையில் அவர்கள் நம்மையும் உண்மையாக இருக்கச் சொல்லாமல் சொல்கிறார்கள்.
அவர்களின் இரகசியம் கொண்டு நம்மனதின் இரகசியங்களை உடைக்கிறார்கள்.
ஆனால் சந்திப்பின் இறுதியில் இவர்கள் நம்மை மயிலிரகைப் போல மென்மையாக்கிச் செல்கிறார்கள்…

என் மனதில் கல் எறிந்தவர்கள்

பாடலின் வரிகள்,
கவிஞனின் வலிகள்,
இரவின் நீளம்,
அது போல ஏதோ ஒன்று,
அவள் போல யாரோ ஒருத்தி,
அவன் போல யாரோ ஒருவன்

இவர்களுக்கெல்லாம் மனதில் கல்
எறிந்து பார்க்கும் வேடிக்கை
வாடிக்கையாகப் போய்விட்டது.

என் மனதில் கல் எறிந்தவர்கள் இவர்கள்…!

வரலாற்றின் கணக்குப் புத்தகம்

மஞ்சள் பையில் சுற்றிவைக்கப்பட்டு,
மஞ்சளும், குங்குமம் கலந்து
பெருவிரலில் பாதி
ஆள்காட்டி விரலில் மீதி அள்ளி
அதன் நாலாபுறங்களிலும் தடவப் பட்டிருந்தது…

நான் இந்தப் பூமிக்கு வாடகைக்கு வாழ வந்தபோது யாரோ ஒருவர் அவசரவரசமாக எழுதிய என் வரவு,செலவு கணக்குகளின் வரலாற்றுப் புத்தகம் என அந்த நோட்டுப்புத்தகம் வரலாற்றுப் புத்தகமாக நம்பவைக்கப்பட்டது…

அச்சிறுவதுகளில் என்றாவது ஒருநாள் என்வரலாற்று புத்தகத்தை எனக்கு தொடவும், பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். காரணம் தெரியாத ஓர் ஈர்ப்பு அப்புத்தகத்தைச் சுற்றி மனதில் இருந்து கொண்டே இருக்கும், அந்த நிமிடச் சந்தோசத்திற்காக அப்புத்தகத்தை தொட்டுப் பார்க்கையில் அவ்வயதின் “ரேங்க் கார்டை”ப் பார்ப்பதைப்போல ஏதோவோர் பயம், பரபரப்பு, ஆர்வம் எல்லாம் என்மீது வந்தமர்கிறது. சட்டென புத்தகத்தின் பாதிக்கு மேலான பக்கங்களில் திருப்பி நான் வாழப்போகும் வாழ்கையை கூட தேடிப்பார்த்திட நினைத்தது உண்டு. அச்சிறு வயதில் வண்ணங்களைத் தவிர அந்தப் புத்தகத்தில் ஏதும் புரிந்ததில்லை. அவ்வளவு சீக்கிரம் எந்தக் கஷ்டங்களும் கடந்திட வாய்ப்பளிப்பதேயில்லை.

வருடங்களுக்கு சில வயது
ஆனதிற்குப் பிறகு,
விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற எனக்கு, நேற்றைய பகலில் எதேச்சையாக அப்புத்தகம் கண்முன் கிடந்தது,

மீண்டும் அந்த ஒரு நிமிட போலிச் சந்தோசத்திற்காக அந்தப் புத்தகம் என்னைத் திறந்து பார்க்கத் தூண்டிச் சிரிக்கிறது…

இதுபோல எத்தனை எத்தனையோ போலி
ஒரு நிமிடங்களை நான் தவிர்க்க வேண்டி இருக்கிறது.

நினைத்துப் பார்த்தால் இதுபோன்ற போலி நிமிடங்கள் எனது உண்மையான நிமிடங்களை விட அதிகமாக இருக்கிறது.

இயல்பாயிருத்தல்

எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது?????
எப்போதும் போல முன்இரவில்
சென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.

நிரப்பப்படாத இடைவெளியில்
நாம் சாலையை கடக்க தவறினால்,
அந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.

பாதிக்கடலை நீந்தியதைப் போல,
பாதிக் கிணற்றைத் தாண்டியது போல,
பாதி பால்யத்தை வாழ்ந்தது போல
அந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.

மறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.

அச்சாலையைக் கடக்க உதவும்
சிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்
என் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…

அந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்
அல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்
அல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…

யாரென்றெனைத் தெரியாத சாலையில்
எனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்
அவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…
இப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.

இவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று!

தூக்கிலிடப்பட்ட உண்மைகள்

உண்மைகள் இயல்பில் சுவாரசியம் குறைவு என்பதனால் தினம் இங்கு எத்தனையோ உண்மைகள் தூக்கிலிடப்படுகின்றன
அல்லது தூக்கியெறியப்படுகின்றன.
இருக்கும் ஆயிரம் வண்ணங்களில், உண்மைகள் வண்ணமில்லாமல் வெறுமனே இருப்பதால் வெளிச்சந்தையில் அது விரும்பப்படுவதில்லை.
உண்மைகள் சொல்லப்படுவதில்லை,
அல்லது உண்மைகள் கேட்கப்படுவதோ, ஏற்கப்படுவதோ இல்லை.
உதாரணமாக, நினைவு தெரிந்த நாளிலிருந்து என் விடுப்புகளுக்கு As I’m Suffering From Fever என்பதைத் தவிர வேறெதுவும் லீவ் லெட்டர்களில் எழுதப்பட்டதில்லை…

அவசரமாக நெடுந்தூக்கம்

பாதிப்பகல் நேரத்தில்
தூங்கச் சென்றான்
இளவயது நண்பன், மரணத்தின் மடியில்…

இன்னும்
இரவில் நான் தூங்கச் செல்லும் போதெல்லாம்
அடுத்த நாளுக்கான அலாரம் வைக்கையில் யோசிக்கிறேன்
இந்தத் தூக்கத்தின் நீளம் எவ்வளவு தூரமாக இருக்குமென்று…!

பூமிவிரோதிகள்

உலகம்
தன் எல்லைகளைச் சுருக்கிக் கொண்டு இருக்கிறது,
நாடுகள் தன் எல்லைகளை பெருக்கிக் கொண்டு இருக்கிறது.

இங்கு தேசவிரோதிகளை விட, பூமிவிரோதிகள் அதிகம்…

வாடகைக்கு ஒரு குருவிக் கூடு

இனிமேல் முடிந்தால்
ஒரு குருவியின் கூட்டைக் கட்ட வேண்டும்
இல்லையேல்
அதன் கூட்டில் வாடகைக்கேனும் செல்ல வேண்டும்…

உங்களில் யாருக்கேனும்
தெரிந்த குருவிகள் கூட்டில்
ஓரிடம் இருந்தால் எனக்குக் கேட்டுச் சொல்லுங்கள்.,

இதுவரை குருவிகளையும், அதன் கூடுகளையும்
கவனிக்காமல் இருந்தாலும் சரி ,
இனிமேலாவது கவனித்துச் சொல்லுங்கள்.

என்றாவது ஒருமுறை கவலைப் பட்டிருப்போமா…?
அடைமழைகளில் ,
சூறைக்காற்றுகளில்
குருவிகளின் கூடு என்னவாயிருக்கும் என்று?

இனிமேலாவது கவனியுங்கள்
நாளை அது நான் புகப்போகும் ஒரு வீடு …

Friends with Benefits

புதிதாகத் துணை வேண்டி ஒரு விளம்பரம்,

வயது 18 முதல் 28 வரையுள்ள
முன் அறிமுகம் இல்லாத முகங்கள் வேண்டும்.
ஒருவொருக்கு ஒருவராகச் சேர்ந்து
அவரவர் வருத்தங்களுக்காக நினைத்து நினைத்து
அழுக அனுமதி உண்டு….,

அனுமதித்த நேரம் வரை
இருவரும் இணைந்து அழுது கொள்ளலாம்,
ஒருவர் வருத்தங்களை மற்றவர்
கேட்கவோ வருத்தப்படவோ அனுமதி இல்லை,
அதற்கான அதற்கான தேவையும் இல்லை…

ஒருவரின் அழுகைக்கு
மற்றொருவர் அழுதபடி துணையாக இருப்பார்.

இன்றைய தேவை
அவரவர் வருத்தங்களோடு அழுதிட ஒரு கூட்டணி…!