ஆகச் சிறந்த நம்பிக்கைகள்

எழ நினைத்து தவறி விழும் குழந்தை,

கடந்து செல்லும் இரயிலுக்கு கைகாட்டும் சிறுவன்,

விரல்விட்டு நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் குழந்தை…

வயதோடு வளராமல் விட்டுப்போன
ஆகச் சிறந்த
நம்பிக்கைகள் இவைகள்…

குறுக்கு வழியில் குழந்தைப் பருவம்

ஐஸ்கிரீம் சாப்பிட்ட நடுநிசி,

குடையில்லா தினங்களின் மழை,

ஸ்வீட் கடைக்கு முன் நிற்கும் முதற்சில நிமிடங்கள்,

அம்மாவின் மடியில் முந்தானைப் போர்வையில் சிறு தூக்கம்,

அப்பாவின் தட்டிலிருந்து
அவர் கைப்பிடி சாப்பாடு,

புகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காத அக்காவின் அக்கறைகள்…

இவையெல்லாம் குறுக்கு வழியில் குழந்தை பருவத்துக்கு கூட்டிச் செல்லும் வழித்தடங்கள்…

மகளதிகாரம் கவிதை

தூக்கம் விழித்த
பாதி இரவுகளில்,

மகள் நெற்றி முத்தமிட்டு
மறுதூக்கம் செல்கையில்
அழகென்றாகிறது அவ்விரவு…

#மகளதிகாரம்

மழையே குடை

பேரன்பின் பெரும் குடையாக விரிகிறது அவளது குட்டி விரல்கள்….
எனக்கான குடையென விரியும் போது….

அன்பின் அடைமழை காலத்தில் பெய்யும் பெருமழையும் அவள், எனைக் கொய்யும் குறும்புக் குடையும் அவள்…

கூட்டுக் குடையின் கீழ் நனைகிறோம் மழையே குடையேந்தியதால்…

#மகளதிகாரம்

உன் கோபம் என் சாயல்

என் மகள் கோபத்தில் என் சாயல் தெரிவதாகச் சொல்கையில் தான் தெரிகிறது எவ்வளவான கோபக்காரன் நான் என்று…

#மகளதிகாரம் #தாயுமானவர்

Blog at WordPress.com.

Up ↑