வேடம் தாங்கிய பறவைகள்

நகரத்தில் புதிதாக வந்திருக்கும் பறவைகள் இவர்கள்,

சந்தோசங்களைக் கொண்டு வரும் தேவதூதர்கள் இவர்கள்,

சந்தோசங்களை, தேவைகளை, அவசரங்களை ஓரிடத்தில் இருந்து வேறிடம் கடத்துகிறார்கள்.

பூக்களைச் சுமக்கையில் அவற்றின் வாசனைகளை இவர்கள் சுவாசிப்பதில்லை,
முதலாளித்துவ முரட்டுத்தனங்களும் அடிமைத்தன ஆசைகளும் இந்நகரத்தில் யாரோ ஒருவரால் இவர்கள் மீது செலுத்தப்பட்டிருக்கும்,

எந்த நிமிடத்திலும் யாராவது ஒருவரால் கண்காணிக்கப்படுபவர்களாக

இருக்குமிவர்களுக்கு ப்ரைவசியென்ற ஒன்று இருந்தாக இல்லை,

கொண்டுவரும் பொருளுக்கேற்ப சந்தோசமாகச் சிரித்துக் கொண்டோ, வருத்தமான முக உணர்ச்சிகளையும் சேர்த்து டெலிவர் பண்ண வேண்டிய தேவையில்லாததால், இவர்களெப்போதும் உணர்ச்சியற்ற அல்லது ஒரே உணர்ச்சியுள்ள முகத்திலேயே டெலிவரி செய்கிறார்கள்.
அந்த அடைமழை இரவில்
எனக்கு உணவு கொண்டு வந்தவர்,
சாரி சார், மழை நல்லாப் பெய்யுது. அதான் டெலிவரி கொஞ்சம் லேட் ஆயிருச்சு எனச் சொல்லியபடி உணவை என் கை மாற்றினார்.

தேங்க்ஸ் ப்ரோ, பாத்துப் போங்க எனச் சொன்னதும் பதிலுக்கு ஒரு சிறு சிரிப்பை திருப்பி டெலிவரி செய்துவிட்டு மழையில் நனைந்தபடி இருந்த வண்டிக்குச் சென்றார். அடைமழைக் குளிரிளும் அவர் கை பிடித்திருந்த சாப்பாட்டுப் பொட்டலம் சூடாக இருந்தது.

திரும்ப என் அறைக்கு வந்து பார்க்கையில் இந்த டெலிவரிக்கு எத்தனை ஸ்டார் கொடுப்பீர்கள் என ஐந்து ஸ்டார்களை மட்டும் வைத்துக் கொண்டு கேட்கிறது என் மொபைலுக்குள் தங்கியிருக்கும் அவருடைய எஜமான்.

அர்த்தமற்ற வருத்தம் தான்
டெலிவரி பையன்கள் மீது எனக்கெப்போதும்…

நம் நாளை

உனக்கான நாளை வெகு நாள் தொலைவில்லை எனும் உள்ளுன் மனம் உரைக்கும் உண்மை நீயென்றிருக்க,

ஊர் சொல்லும் தூர் பயனில என்போம் நாம்…

இயந்திர மனிதன்

தோல் கடித்த எறும்பு, தன்னுயிர் தொலைத்தது தொடுதிரையில் சிக்கி…

இதயத்திற்கும், இயந்திரத்திற்குமிடையே இடம் மாறிய உணர்வுகள்…

நேரம் தவறிய கடிகாரம்

அலுவல்களுக்கு இடையில் அவ்வப்போது பார்க்கிறேன் கடிகாரம் ,
எனக்கு மட்டும் கடினமான நேரத்தை மட்டுமே காட்டுவதேனோ என்று

இப்படிக்கு நான் எந்த நாட்டு நேரத்தையோ என் நாட்டில் பார்த்து இயங்கும் இயந்திர மனிதன்

கார்ப்பரேட்டின் கட்டுப்பாட்டில் இயற்கை இருந்திருந்தால்

இரவு நேரமும் விழி திருகும் சூரியன்,
நாம் சந்திக்க வாய்ப்பில்லாத சந்திரன் ,
மோக மழை பெய்யும் மேகம்,
என்னை ஏற இறங்க பார்த்து அதற்கேற்ப வேகம் கூட்டும் காற்று …..
ஒருவேளை இவை அனைத்தும் நிகழ்ந்திருக்கும் கார்ப்பரேட்டின் கட்டுப்பாட்டில் இயற்கை இருந்திருந்தால்

கணக்கில் வரா வாரம்

மாதக்கணக்கில் நாணயமாக இருந்த வாரங்கள் நான்கில் (மாதம்-4 வாரம்), வருடக்கணக்கிற்க்கு வரும் போது நான்கு வழி தவறிப்போனதேனோ ? ( வருடம் – 52 வாரம் , 12*4=48 வாரம் )

Blog at WordPress.com.

Up ↑