Shift+Delete

ஒரு உறவை,
ஒரு அறிமுகத்தை,
ஒரு நினைவுகளை,
ஒரு உரையாடலை,
ஒரு தொடர்பு எண்ணை
மொபைல் போனிலிருந்து டெலிட் செய்யப்படுவது போல
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை

மனதிலிருந்து ஒவ்வொன்றாக டெலிட் செய்ய முயற்சிக்கையில்…

வேடம் தாங்கிய பறவைகள்

நகரத்தில் புதிதாக வந்திருக்கும் பறவைகள் இவர்கள்,

சந்தோசங்களைக் கொண்டு வரும் தேவதூதர்கள் இவர்கள்,

சந்தோசங்களை, தேவைகளை, அவசரங்களை ஓரிடத்தில் இருந்து வேறிடம் கடத்துகிறார்கள்.

பூக்களைச் சுமக்கையில் அவற்றின் வாசனைகளை இவர்கள் சுவாசிப்பதில்லை,
முதலாளித்துவ முரட்டுத்தனங்களும் அடிமைத்தன ஆசைகளும் இந்நகரத்தில் யாரோ ஒருவரால் இவர்கள் மீது செலுத்தப்பட்டிருக்கும்,

எந்த நிமிடத்திலும் யாராவது ஒருவரால் கண்காணிக்கப்படுபவர்களாக

இருக்குமிவர்களுக்கு ப்ரைவசியென்ற ஒன்று இருந்தாக இல்லை,

கொண்டுவரும் பொருளுக்கேற்ப சந்தோசமாகச் சிரித்துக் கொண்டோ, வருத்தமான முக உணர்ச்சிகளையும் சேர்த்து டெலிவர் பண்ண வேண்டிய தேவையில்லாததால், இவர்களெப்போதும் உணர்ச்சியற்ற அல்லது ஒரே உணர்ச்சியுள்ள முகத்திலேயே டெலிவரி செய்கிறார்கள்.
அந்த அடைமழை இரவில்
எனக்கு உணவு கொண்டு வந்தவர்,
சாரி சார், மழை நல்லாப் பெய்யுது. அதான் டெலிவரி கொஞ்சம் லேட் ஆயிருச்சு எனச் சொல்லியபடி உணவை என் கை மாற்றினார்.

தேங்க்ஸ் ப்ரோ, பாத்துப் போங்க எனச் சொன்னதும் பதிலுக்கு ஒரு சிறு சிரிப்பை திருப்பி டெலிவரி செய்துவிட்டு மழையில் நனைந்தபடி இருந்த வண்டிக்குச் சென்றார். அடைமழைக் குளிரிளும் அவர் கை பிடித்திருந்த சாப்பாட்டுப் பொட்டலம் சூடாக இருந்தது.

திரும்ப என் அறைக்கு வந்து பார்க்கையில் இந்த டெலிவரிக்கு எத்தனை ஸ்டார் கொடுப்பீர்கள் என ஐந்து ஸ்டார்களை மட்டும் வைத்துக் கொண்டு கேட்கிறது என் மொபைலுக்குள் தங்கியிருக்கும் அவருடைய எஜமான்.

அர்த்தமற்ற வருத்தம் தான்
டெலிவரி பையன்கள் மீது எனக்கெப்போதும்…

தவிர்த்திருத்தல்

இருள் மெல்லக்கவ்விய சாலையின் ஓரத்தில், நகர்பவர்களை வேடிக்கை பார்த்தபடி நகராமல் அமர்ந்திருந்தேன்.

அந்த மெல்இருட்டில் திடீரென ஒருவர் என் முன் நின்றார் அல்லது அப்போது தான் நான் அவரை அவ்வழியில் திடீரென கவனிக்கிறேன்.

என்னிடம் வந்த அவர் தன்னைக் கார்பரேட் கடவுள் என அறிமுகம் செய்து கொண்டார், பதிலுக்கு நானும் இந்தக் கார்பரேட்டின் ஒரு எச்சம் தானென அறிமுகம் செய்து கொண்டேன்.

கார்பரேட் சாம்பிராணிகள் மார்க்கெட்’க்கு வந்த சில நாட்களிலிருந்து கார்பரேட் சாமியார்கள் நாங்களும் உருவாக்கப்பட்டோம் என தொழில் வரலாறு பேசினார்.

என்னிடம் பதிலுக்கு ஏதோ எதிர்பார்த்திருக்கிறார் என நினைத்து பதில் தேடி நானும் மௌனமானேன்.

ஏதோ ஓர் கல்லூரி நிறுவன அதிபரின் வியாபார ஆசைப்படி அவர் கல்லூரியில் படிக்கப்பட்டு உருவான கம்ப்யூட்டர் என்ஜினியர் நான், இதில் என் விருப்பங்கள் வியாபாரமாக்கப்பட்டதை நினைத்தபடி இருந்தேன்.

எங்களின் தொடர் மௌனத்தைக் கடவுள் தன் தொண்டையைக் கனைத்தபடி கலைத்து என் அன்றாடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

என்னைப் பற்றி உனக்கெப்படி தெரியும் எனக் கேட்க நினைத்ததும், அவர் கடவுள் எனச் சொல்லியது ஞயாபகம் வர நான் மீண்டும் அமைதியானேன்.

சட்டென அவரின் செல்போன் சினுங்க, பாஸ்வேர்டு கொடுத்து செல்போன் சினுங்களை அணைத்து அதனிடம் பேச ஆரம்பித்தார். கடவுளே ஆனாலும் நம்ப மறுக்கிறது செல்போன். ஒருவேளை செல்போனுக்கு அவரிடம் ஆகவேண்டிய காரியம் ஏதுமில்லை என நினைத்துக் கொண்டேன்.

அந்த முன்னிரவில் அவரின் முன்னாள் தோழியிடம் இருந்து அழைப்பு வர, புன்முறுவலுடன் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தவர், ஒரு நிமிடம் அந்தப் பெண்ணிற்கான உலகத்தை Holdல் போட்டுவிட்டு என்னிடம் பேச்சைத் தொடர்ந்தார்.

என்னை எப்போதும் யாரோ ஒருவர் அழைத்துக் கொண்ட தான் இருப்பார்கள், இப்போதைக்கான அழைப்பு வந்துவிட்டது.

உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, என்ன வேண்டும் எனக் கேள் என்றார்.

என்னின் எந்தப்பிரச்சனைகளைத் தீர்க்கச் சொல்லி அவரிடம் கேட்பது எனக் குழம்பிய நான், என் எல்லாப் பிரச்சனைகளும் தீர ஒரு வழி சொல்லுங்கள் என்றேன்.

சற்றும் யோசிக்காத அவர்,

“தவிர்த்திருத்தல் ஒரு தவம்,
முடிவில் நீ, நீயாக கிடைப்பது அதன் வரம்” என்றபடி மறைந்தார்.

எதை, எப்படித் தவிர்க்கச் சொல்கிறார் என யோசித்தபடி என் அறைக்கு வந்து சேர்ந்தேன்.

தோழி ஒருத்தி அவளுக்கு வந்த Unknown ஹாய்’களைத் தவிர்த்ததாகச் சொல்லியிருந்தாள்,

நண்பன் ஒருவன் அவனின் இரவுகளின் தூண்டலைத் தவிர்த்ததாகச் சொல்லியிருந்தான்,

அவ்விரவில் மேகங்கள் என்மீது மழை பெய்யாமல் தவிர்த்திருந்தது.

இப்படி பதிலனுப்பப்படாத ஹாய் முதற்கொண்டு எத்தனையோ வழிகளில் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டது கண்டு கடவுளுக்கு பெரும்நன்றி சொல்லியதில்,

அந்நடு இரவில் திடீர் சத்தம் கேட்டெழுந்த என் நண்பன் ஒரு நிமிடம் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் மீண்டும் தூங்கப்போனான்.

கடவுள் வந்து சென்றது கனவென உணர்கையில்,
பேய்ப் பிடித்ததைப் போல உட்கார்ந்திருந்தேன் அவ்விரவில் நெடுநேரம்…

மனச்சடங்குகள்

ஹாய், ஹலோவில் தொடங்கி,
ஹவ் ஆர் யூ? ஐயம் ஃபைன்’ஐ நம்புவதெல்லாம்
மூடநம்பிக்கையின் அறிவியல் வளர்ச்சி…

மனதின் நிர்வாணங்கள்

அந்த இரவோடு மறந்திடப் போகும் முகங்களைச் சந்திப்பது போல்
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை நம்முன் நிர்வாணமான மனது கொண்டவர்களைச் சந்திப்பது.

அவர்களைச் சுற்றியிருந்த பொய்களைக் கலைத்து எறிந்துவிட்டுப் பார்க்கையில்,
அவர்களின் எடை கூடிச் செல்கிறது.

மனதின் நிர்வாணங்களைச் சந்திக்கையில் அவர்கள் நம்மையும் உண்மையாக இருக்கச் சொல்லாமல் சொல்கிறார்கள்.
அவர்களின் இரகசியம் கொண்டு நம்மனதின் இரகசியங்களை உடைக்கிறார்கள்.
ஆனால் சந்திப்பின் இறுதியில் இவர்கள் நம்மை மயிலிரகைப் போல மென்மையாக்கிச் செல்கிறார்கள்…

என் மனதில் கல் எறிந்தவர்கள்

பாடலின் வரிகள்,
கவிஞனின் வலிகள்,
இரவின் நீளம்,
அது போல ஏதோ ஒன்று,
அவள் போல யாரோ ஒருத்தி,
அவன் போல யாரோ ஒருவன்

இவர்களுக்கெல்லாம் மனதில் கல்
எறிந்து பார்க்கும் வேடிக்கை
வாடிக்கையாகப் போய்விட்டது.

என் மனதில் கல் எறிந்தவர்கள் இவர்கள்…!

வரலாற்றின் கணக்குப் புத்தகம்

மஞ்சள் பையில் சுற்றிவைக்கப்பட்டு,
மஞ்சளும், குங்குமம் கலந்து
பெருவிரலில் பாதி
ஆள்காட்டி விரலில் மீதி அள்ளி
அதன் நாலாபுறங்களிலும் தடவப் பட்டிருந்தது…

நான் இந்தப் பூமிக்கு வாடகைக்கு வாழ வந்தபோது யாரோ ஒருவர் அவசரவரசமாக எழுதிய என் வரவு,செலவு கணக்குகளின் வரலாற்றுப் புத்தகம் என அந்த நோட்டுப்புத்தகம் வரலாற்றுப் புத்தகமாக நம்பவைக்கப்பட்டது…

அச்சிறுவதுகளில் என்றாவது ஒருநாள் என்வரலாற்று புத்தகத்தை எனக்கு தொடவும், பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். காரணம் தெரியாத ஓர் ஈர்ப்பு அப்புத்தகத்தைச் சுற்றி மனதில் இருந்து கொண்டே இருக்கும், அந்த நிமிடச் சந்தோசத்திற்காக அப்புத்தகத்தை தொட்டுப் பார்க்கையில் அவ்வயதின் “ரேங்க் கார்டை”ப் பார்ப்பதைப்போல ஏதோவோர் பயம், பரபரப்பு, ஆர்வம் எல்லாம் என்மீது வந்தமர்கிறது. சட்டென புத்தகத்தின் பாதிக்கு மேலான பக்கங்களில் திருப்பி நான் வாழப்போகும் வாழ்கையை கூட தேடிப்பார்த்திட நினைத்தது உண்டு. அச்சிறு வயதில் வண்ணங்களைத் தவிர அந்தப் புத்தகத்தில் ஏதும் புரிந்ததில்லை. அவ்வளவு சீக்கிரம் எந்தக் கஷ்டங்களும் கடந்திட வாய்ப்பளிப்பதேயில்லை.

வருடங்களுக்கு சில வயது
ஆனதிற்குப் பிறகு,
விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற எனக்கு, நேற்றைய பகலில் எதேச்சையாக அப்புத்தகம் கண்முன் கிடந்தது,

மீண்டும் அந்த ஒரு நிமிட போலிச் சந்தோசத்திற்காக அந்தப் புத்தகம் என்னைத் திறந்து பார்க்கத் தூண்டிச் சிரிக்கிறது…

இதுபோல எத்தனை எத்தனையோ போலி
ஒரு நிமிடங்களை நான் தவிர்க்க வேண்டி இருக்கிறது.

நினைத்துப் பார்த்தால் இதுபோன்ற போலி நிமிடங்கள் எனது உண்மையான நிமிடங்களை விட அதிகமாக இருக்கிறது.

இயல்பாயிருத்தல்

எப்படி இவர்களால் மட்டும் இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது?????
எப்போதும் போல முன்இரவில்
சென்னையின் ஓ எம் ஆர் சாலை பரபரப்பில் பயணித்துக் கொண்டிருந்தது.

நிரப்பப்படாத இடைவெளியில்
நாம் சாலையை கடக்க தவறினால்,
அந்த சாலை நம்மை வெகுவேகமாகக் கடந்துவிடும்.

பாதிக்கடலை நீந்தியதைப் போல,
பாதிக் கிணற்றைத் தாண்டியது போல,
பாதி பால்யத்தை வாழ்ந்தது போல
அந்தச் சாலையில் பாதித் தூரத்தைக் கடந்து, காத்துக்கொண்டிருந்தேன்.

மறுமுறை இந்தச் சாலை தன்மீது வண்டிகளைச் சுமக்காமலிருந்து ஒரு சிறு மூச்சுவிட்டுக் கொள்ளும் அந்தச் சந்தடி சாக்கில் மீதமுள்ள மறுமுனையை ஒருசில எட்டிகளில் கடந்திட வேண்டும்.

அச்சாலையைக் கடக்க உதவும்
சிறு சந்தடி இடைவெளி கிடைத்து நான் நகர இருந்த நேரத்தில்
என் பின்னே நின்ற பெண்ணொருத்தி தூரத்தில் வர ஆரம்பித்திருந்த வாகனத்தைப் பார்த்ததும், பயத்தில் சட்டென என்கை இழுத்து அவளுக்கும் பின்னாக என்னை நிறுத்திவிட்டு, வேகச்செல்லும் வண்டியால் அவளுக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்…

அந்தப் பெண்ணிற்கு இந்நகரம் புதியதாக இருக்கலாம்
அல்லது இந்தச் சாலை புதியதாக இருக்கலாம்
அல்லது என்னைப் போன்ற நகரம் பழகிய மனிதர்கள் புதியவர்களாக இருக்கலாம் அல்லது இவையெல்லாமே சேர்ந்து புதியதாக இருக்கலாம்…

யாரென்றெனைத் தெரியாத சாலையில்
எனைப் பிடித்திழுத்த அச்சிறு வேளையில்
அவள் இச்சமூகத்தைப் பற்றியோ, என்னைப் பற்றியோ, அவளைப் பற்றியோ ஏதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை…
இப்படியான இயல்பாக இருக்கும் ஒருவரை பார்க்கையில் வியப்பாக, ஏக்கமாக இருக்கிறது.

இவர்கள் மட்டும் இன்னும் எப்படி இயல்பாக இருக்கிறார்கள் என்று!

தூக்கிலிடப்பட்ட உண்மைகள்

உண்மைகள் இயல்பில் சுவாரசியம் குறைவு என்பதனால் தினம் இங்கு எத்தனையோ உண்மைகள் தூக்கிலிடப்படுகின்றன
அல்லது தூக்கியெறியப்படுகின்றன.
இருக்கும் ஆயிரம் வண்ணங்களில், உண்மைகள் வண்ணமில்லாமல் வெறுமனே இருப்பதால் வெளிச்சந்தையில் அது விரும்பப்படுவதில்லை.
உண்மைகள் சொல்லப்படுவதில்லை,
அல்லது உண்மைகள் கேட்கப்படுவதோ, ஏற்கப்படுவதோ இல்லை.
உதாரணமாக, நினைவு தெரிந்த நாளிலிருந்து என் விடுப்புகளுக்கு As I’m Suffering From Fever என்பதைத் தவிர வேறெதுவும் லீவ் லெட்டர்களில் எழுதப்பட்டதில்லை…

அவசரமாக நெடுந்தூக்கம்

பாதிப்பகல் நேரத்தில்
தூங்கச் சென்றான்
இளவயது நண்பன், மரணத்தின் மடியில்…

இன்னும்
இரவில் நான் தூங்கச் செல்லும் போதெல்லாம்
அடுத்த நாளுக்கான அலாரம் வைக்கையில் யோசிக்கிறேன்
இந்தத் தூக்கத்தின் நீளம் எவ்வளவு தூரமாக இருக்குமென்று…!

Start a Blog at WordPress.com.

Up ↑